7. காணாமல் போனேன்.

 




7. காணாமல் போனேன்.


சினிமா என்பது அந்தக் காலத்தில் வாழ்வின் மிக சந்தோச பக்கங்கள். எம்ஜிஆர் புதுப்படம் வரும்போதெல்லாம் எங்கள் அப்பா சினிமா புரோக்ராம் போடுவார். மாலை 5 மணி சதரன் பஸ்ஸில் குடும்பமாக நாமக்கல் போவோம். முதலில் எம்ஜிஆர் படம் பார்த்துவிட்டு இரண்டாவது ஆட்டம் சிவாஜி,  ஜெமினி, ஜெய்சங்கர், முத்துராமன் போன்றோர்களின் ஏதேனும் ஒருவர் படத்தை பார்ப்போம். பிறகு எங்கள் அப்பாவின் சைக்கிள் கடை வைத்துள்ள நண்பரொருவரின் கடையில் சென்று படுத்துக் கொள்வோம். விடியற்காலை முதல் பஸ் ஆன செல்வம் பஸ்ஸில் வீடு வந்து சேருவோம். அதேபோன்று அக்கம் பக்கங்களில் வரும் திருவிழாவிற்கு செல்லும் போது எப்படியும் ஒன்றிரண்டு  திரைப்படம் பார்த்து வருவோம். 


ஒரு முறை ஆடி பதினெட்டு தினத்திற்கு கொடுமுடி ஆற்றுக்கு சென்றோம். அந்தக் காலத்தில் அரசு பேருந்துகள் கிடையாது. தனியார் பேருந்து தான் அதுவும் ஒன்றிரண்டு தான் இருக்கும். அதிகமாக வேன்கள் போகும். வேனின் உள்ளேயும் மேலேயும் மக்கள் ஏறி பயணம் செய்வார்கள். கொடுமுடியில் இருந்து வேலூருக்கு வேனில் வந்து எங்கள் ஊருக்கு பஸ்ஸில் செல்ல வேண்டும். கொடுமுடியில் இருந்து திரும்பும்போது வேனில் பயங்கர கூட்டம். அப்போது சின்னப்பையனாக இருந்த நான் கூட்ட நெரிசலில் தூக்க கலக்கத்தில் எப்படியோ கடைசி வரிசை சீட்டிக்கு அடியில் போய் படுத்துக் கொண்டேன். வேலூரில் வந்து எங்கள் அப்பா அம்மா அண்ணன் தங்கை எல்லாம் இறங்கிவிட்டார்கள். நான் தூங்கிக் கொண்டிருந்ததால் இறங்கவில்லை. நானும் இறங்கி இருப்பேன் என்று நினைத்து சற்று நேரம்  கவனிக்காமல் இருந்துவிட்டார்கள். அந்த வேன் பயணிகளை எல்லாம் அங்கு இறக்கி விட்டுவிட்டு மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு கொடுமுடிக்கு புறப்பட்டுவிட்டது. பிறகுதான் என்னை காணவில்லை என்று தெரிந்து கண்ணா கண்ணா என்று கத்திக்கொண்டு அக்கம்பக்கம் தேடியுள்ளார்கள். எங்கும் காணவில்லை என்பதால் வேனிலிருந்து தான் நான் இறங்கவில்லை என்று ஒரு முடிவுக்கு வந்துள்ளார்கள். அந்த வேனின் பெயர், எண்ணை யாரும் அடையாளம் பார்த்து வைத்துக் கொள்ளவில்லை. எப்படி என்னைத்தேடி கண்டுபிடிப்பது என்று தெரியாமல் விழித்துள்ளார்கள். பிறகு எங்கள் அப்பா வாடகை கார் எடுத்து கொடுமுடிக்கு தேடிச்சென்று ஒவ்வொரு வேனாகப் பார்த்து கேட்பது என்று முடிவுக்கு வந்து அதுபடியே செய்தார். 


இதனிடையே நான் கொடுமுடி செல்லும் வழியில் தூக்கம் தெளிந்து சீட்டிக்கடியில் இருந்து வெளியில் வந்து அம்மா அப்பாவை காண வில்லை என்பதால் அழத் தொடங்கிவிட்டேன். பிறகு பயணிகள் நடத்துநர் எல்லாம் யார் என்னவென்று கேட்டு என்னை அழ வேண்டாம் என்று ஆறுதல் படுத்தினார்கள். அந்த வேன் கொடுமுடியில் இருந்து வேலூருக்கு திரும்பும்போது என்னை டிரைவர் அருகில் முன் சீட்டில் உட்கார வைத்துக் கொண்டார். நடுவழியில் காரில் வந்த எங்கள் அப்பா எதிரில் வேன் வருவதைப் பார்த்து இறங்கி கைகாட்டி வேனை நிறுத்தினார். நானும் அப்பா நிற்பதை பார்த்து அப்பா அப்பா என்று கத்தினேன். வேன்காரர்கள்  என்னை இறக்கி விட்டார்கள்.  எங்கள் அப்பா வேன் காரர்களுக்கு நன்றி சொல்லி   என்னை கட்டி அணைத்து தூக்கிக்கொண்டு காருக்கு சென்றார். எனது அம்மா அண்ணன் தங்கை எல்லாம் அழுது என்னை அரவணைத்துக் கொண்டார்கள். நல்லபடியாக காணாமல் போன நான் எங்கள் குடும்பத்துடன் சேர்ந்தேன்.


நான் பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் வணிகவியல் டிப்ளமோ படித்து தேர்ச்சி அடையாமல் வீட்டில் வந்து இருந்தேன். அப்போது எனக்கு பத்தொன்பது  இருபது வயது. கவிதை கதை என்று முற்போக்காக எழுதிக் கொண்டிருந்தேன். தலித் சமுதாய பள்ளிக்கூட நண்பர்கள் சிலர் இருந்தார்கள். பின்னாளில் டாக்டர் ஆன நண்பர் ஒருவர் அவரின் தங்கை தெரட்டிக்கு வரச்சொல்லி அழைப்பு கொடுத்து விட்டார். தீண்டாமை,  ஜாதி ஏற்றத்தாழ்வு பார்க்கக்கூடாது என்பதில் எனது உள்ளம் உறுதி கொண்டிருந்தது. ஆனால் அந்த காலகட்டத்தில் கிராமப்புறத்தில் தலித் சமுதாய விழா விசேஷங்களுக்கு மற்ற சாதிகாரர்கள் செல்வது கிடையாது. நான் தெரட்டிக்கு செல்வதாக சொன்னவுடன் எங்கள் அப்பா போகக்கூடாது என்று தடை போட்டார். அப்படி போனால் ஊர்க்காரர்கள் கேவலப் படுத்துவார்கள்; தண்டித்து விடுவார்கள் என்று சொன்னார். அதெல்லாம் முடியாது. நான் போயே தீருவேன் என்று அப்பாவுடன் சண்டை போட்டுக்கொண்டு புறப்பட்டு போய் விட்டேன். விசேஷத்தில் கலந்து கொண்டு விட்டு வீட்டுக்குத் திரும்பினேன். ஆனாலும் அப்பாவிடம் சண்டை போட்டுக் கொண்டு சென்று விட்டதால், வீட்டுக்குள் செல்ல பயந்துகொண்டு வீட்டுக்கு பின் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டிருந்தேன். வீட்டுக்குள் எப்படி செல்வது? அப்பா என்ன சொல்லுவார்?  என்ன செய்வார்? என்று குழம்பிக்கொண்டிருந்தேன். ஆனால் நான் வந்ததை எப்படி தெரிந்து கொண்டாரோ தெரியவில்லை, எங்கள் அப்பா மெதுவாக வீட்டுக்கு பின் பக்கம் வந்து இங்க ஏன் வந்து உட்கார்ந்திருக்கே? வீட்டுக்குள் வர வேண்டியதுதானே? என்று தன்மையாக கூறிக்கொண்டு எனது கையை பிடித்து வீட்டிற்குள் அழைத்து சென்றார். தெரட்டிக்கு போனது பற்றி எதுவும் சொல்லவில்லை. அதோடு அந்த பிரச்சினை அன்று முடிந்தது. 


வயதான காலத்தில் எங்கள் அப்பாவிற்கு ஒரு கண்ணில் புரை விழுந்துவிட்டது. அதை அறுவை சிகிச்சை செய்து சரி செய்ய முயன்றபோது அறுவை சிகிச்சை பயனளிக்காமல் ஒரு கண்ணின் பார்வை போய்விட்டது. பிறகு பக்கவாதம் வந்ததில் ஒரு கை கால் செயல் இழந்து போனது. சிகிச்சை, மருத்துவம், பயிற்சிகள் மூலமாக ஓரளவுதான் செயல்பாடுகளை மீட்க முடிந்தது.  கடைசி காலத்தில் சில வருடங்கள் அப்பா அம்மாவை எங்கள் வீட்டில்தான் வைத்திருந்தோம். பனை மரங்களில் ஏறி இறங்கிய வலுவான கால்கள் ஏற்கனவே நிறைய உழைத்து விட்டதால், பின்னாளில் நடப்பதற்கு சக்தி அற்றவையாக போய்விட்டன. அவரின் நடமாட்டம் குறைந்து படுத்த படுக்கையான போது அவரைக் கவனித்துக் கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டன. அவரின் உடல் இளைத்த போதிலும் எலும்பு எடை அதிகமாகவே இருந்தன. ஆதலால் ஓர் ஆள் அவரைத் தூக்குவது கடினமாகவே இருந்தது. குறிப்பாக, உடல் வலு குறைவான என்னால் அவரை தூக்கி நகர்த்த இயலவில்லை. அவர்  மலஜலம் கழிக்க அவரைத் தூக்கிச் சென்று வர மிகவும் சிரமப்பட வேண்டியதாக இருந்தது. எனது ஊழியர்களும் அப்பணியை செய்வதற்கு சிரமப்பட்டார்கள். நாங்கள் நடமாட முடியாத அப்பாவை வைத்துக்கொண்டு அவர்களை கொடுமைப்படுத்துவதாக அலுவலகத்தில் அவர்கள் புகாரும் செய்தார்கள். யாருடைய உதவியும் இல்லாமல் அப்பாவை கவனித்துக் கொள்ள வேண்டுமென படுக்கையில் இருந்தபடியே மலஜலம் போவதற்கு ஏதுவாக ஹைதராபாத்திலிருந்து ரூ. 25,000/-க்கு ஒரு படுக்கையை நான் வரவழைத்தேன். ஆனால் அந்தப் படுக்கை கட்டில் போல் வசதியாக இல்லை என்று எங்கள் அப்பா அதில் இருப்பதற்கு மறுத்துவிட்டார். ஆதலால் அந்தப் படுக்கை பயனற்றதாக கிடந்தது. அதில் எனக்கு மிகவும் வருத்தம். 


எங்கள் அப்பாவை வீட்டில் வைத்து நல்லபடியாக பார்த்துக் கொள்ள இயலவில்லை என்பதால்,  வேறு என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டியதாக இருந்தது. முதியோர் இல்லங்களில் முதியோர்களை கருணையுடன், அன்புடன், மனிதநேயத்துடன் பார்த்துக் கொள்வதாகவும், அங்கு இருந்தால் அங்குள்ள முதியவர்களுடன் நட்பாக பேசிக்கொண்டு இருக்கலாம் எனவும், அவர்களுக்கு நல்லபடியாக மகிழ்ச்சியாக பொழுது போகும் எனவும், சுதந்திரமாக இருப்பார்கள் எனவும் நான் எண்ணினேன். முதியோர் இல்லத்தில் விடுவதற்கு பணம் செலவானாலும் பரவாயில்லை, பெற்றோர்கள் சுதந்திரமாக மகிழ்வாக இருந்தால் போதும் என்று கருதினேன். அதன்படி திருச்சியில் ஒரு முதியோர் இல்லத்தை தேர்வு செய்து அங்கு போய் விசாரித்து வந்தேன். அங்கு பெற்றோர் நல்லபடியாக மகிழ்ச்சியாக சுதந்திரமாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் உடனடியாக அங்கு கொண்டு செல்லாமல் எங்கள் ஊருக்கு பக்கத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தின் உதவியுடன்  எங்கள் கிராமத்து வீட்டிலேயே வைத்து பார்த்துக்கொள்ளலாம் என்று நானும் எனது அண்ணனும் முடிவு செய்தோம். ஆனால் அந்த ஏற்பாடு சரியாக அமையவில்லை. முதியோர் இல்லத்தில் இருந்து வேளாவேளைக்கு உணவு வந்தபோதிலும், எங்கள் அப்பாவை நன்கு பராமரிக்க கூடிய நல்ல ஊழியர்கள் வரவில்லை. 


அதன்பிறகு வேறு என்ன செய்யலாம் என்று யோசித்து திருச்சியில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்தலாம்  என்று முடிவு செய்து பெற்றோர்களை அழைத்து வந்தோம். ஆனால் முன்பு கேட்ட போது இருந்த அறைகள் அப்போது இருக்கவில்லை. தனி அறைகள் கிடைக்காத நிலையில், வேறு அறை கிடைக்கின்ற வரையிலும் அம்மாவை வராண்டாவிலும், அப்பாவை ஸ்டோர் ரூமிலும் தற்காலிகமாக வைத்திருப்பது என முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவர்களை சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு அங்கிருந்து அழைத்து வரும் வரை அங்கு வேறு அறை எதுவும் காலியாகவில்லை. அவர்களை  வசதியான அறைக்கு கொண்டு செல்லவும் முடியவில்லை. முதியோர் இல்லத்தில் எங்கள் பெற்றோர்களைக் கொண்டு சென்று விட்டதில் எங்கள் பெற்றோருக்கு சிறிதும் விருப்பமில்லை. ஆதலால் அந்த முதியோர் இல்லத்தில் அங்கிருந்த ஊழியர்களுக்கு எங்கள் பெற்றோர் சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை. எங்கள் அப்பா கண்டபடி எச்சில் துப்பியும், டைபர் அணிந்து கொள்ளாமலும், கண்டபடி மலஜலம் இருந்தும் தனது எதிர்ப்பைக் காட்டிக் கொண்டிருந்தார். எங்கள் அம்மாவும் அவரது பங்கிற்கு முதியோர் இல்ல ஊழியர்களுடன் நிறைய சண்டை போட்டுக்கொண்டு இருந்தார். அதனால் சுமார் ஒரு மாதத்துக்கு உள்ளாகவே உங்கள் பெற்றோர்களை கவனித்துக் கொள்ள இயலவில்லை தயவுசெய்து வந்து அழைத்துச் செல்லுங்கள் என்று போன் செய்து விட்டார்கள். பிறகு நானும் எனது அண்ணனும் பேசி அப்பாவை எனது அண்ணனும் அம்மாவை நானும் வைத்து பராமரித்து கொள்வதென முடிவு செய்தோம். அதன்படி எனது அண்ணன்  அப்பாவை அழைத்துச் சென்றார். எனது அண்ணன் என்னை விட நல்ல திடகாத்திரமாக இருந்தான். அப்பாவை தூக்கி எடுக்கப் பிடிக்க அவனால் முடிந்தது. அம்மா எங்களுடன் வந்துள்ளார். அதன்பிறகு எங்கள் அப்பா சில மாதங்களுக்குள்ளாக இறந்துவிட்டார். 


பெற்று வளர்த்து ஆளாக்கி எவ்வளவோ செய்கின்ற பெற்றோர்களை நம்மால் சரிவர பார்த்துக் கொள்ள இயலவில்லையே என்பது மிகவும் வருத்தம் அளிக்க கூடிய விஷயமாக இருந்தபோதிலும், நடைமுறையில் நம்மால்  ஓரளவிற்குத் தான் செய்ய முடிகிறது. பெற்றோர்களின் முழு திருப்திக்கு  வைத்துப் பராமரிப்பது இயலாததாகவே உள்ளது. நாம் குழந்தையாக இருக்கின்ற போது சிறிய உருவத்தில் எடை குறைவானவர்களாக இருக்கிறோம். அவர்களால் எளிதாக நம்மை தூக்கிக் கொள்ளவும், பராமரிக்கவும்  முடிந்தது. ஆனால் பெற்றோர்கள் எடை மிகுந்தவர்களாகவும், எதிர்பார்ப்பு நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அதனால்தான் பெற்றோர்களை முழு நிறைவாக பராமரிக்க முடியவில்லை என்ற நிலை ஏற்படுகிறது. வயதானவர்களை நன்கு பராமரிக்க நல்ல கருவிகளும் நல்ல ஏற்பாடுகளும் உருவாக வேண்டும். வயதானவர்களும் எல்லாவற்றிலும் குற்றம் குறை கண்டு கொண்டு இருக்காமல் பிள்ளைகளின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு பிள்ளைகளுக்கு மிகுந்த சிரமம் கொடுக்காமல் இருக்க  இயன்ற ஒத்துழைப்பை வழங்க வேண்டும். எப்படி இருந்த போதிலும் எங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சிறிது காலம் விட்டது என்பது குற்ற உணர்வு தரும் ஒரு தவறான முடிவாகவே மனதை உறுத்துகின்றது. 


எங்கள் அப்பாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் குருக்களை வரவழைத்து சடங்கு சம்பிரதாயங்களை நிறைவேற்றி எங்கள் அப்பாவிற்கும் முன்னோர்களுக்கும் பிண்டங்கள் பிடித்து வேலூர் காவிரி ஆற்றுக்கு எடுத்துச்சென்று விட்டு விட்டு வந்தோம். வாழையடி வாழையாக வம்சம் தழைக்க எங்கள் அப்பா மற்றும் முன்னோர்கள் ஆசி வழங்க வேண்டுமென்று வேண்டிக்கொண்டு இறை ஆசியையும் வேண்டி கொண்டு வீடு திரும்பினோம். 

                          ( பயணம் தொடரும்....)

-------------------------------------------------------------------

Comments

Popular posts from this blog

6. பாட்டி எங்கள் குலதெய்வம்

இசை தரும் இனிய பாடல்கள் - 3

1. தொடுவானப் பறவைகள்