6. பாட்டி எங்கள் குலதெய்வம்


6. பாட்டி எங்கள் குலதெய்வம்


அதிகாலையில் எனது மூத்த மகன் அரசு தேர்வு எழுத மதுரை புறப்பட்டு சென்றான். வாழ்த்தி அனுப்பினோம். அரசு தேர்வில் வெற்றி பெற கடவுள் அருள் என்ற கொடுப்பினை வேண்டும்.  தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் கடினமாக தீவிரமாக பாடுபடுகிறவர்களுக்கு அந்த கொடுப்பினைக்கான  வாய்ப்பு இருக்கிறது என்பார்கள். இயன்றளவு படித்து உள்ளான். இருப்பினும் உறுதியாக எதனையும் சொல்ல முடியாதல்லவா? முயற்சி செய்வது மட்டும் தான் நமது கையில் இருக்கிறது. அதற்கான பலன் என்பது இறைவன் கையில்தான் உள்ளது. நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் வாழ்க்கை உருண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. 


நாளை அப்பாவிற்கு முதலாம் ஆண்டு நினைவு நாள். அதற்கான முன்னேற்பாடுகள் இன்று செய்யப்பட்டன. என்னையும் எனது அண்ணன் தங்கையையும் படிக்கவைத்து அரசு வேலை பெறுவதற்கு வழிவகை செய்த எனது அப்பாவை நினைத்துப் பார்க்கின்றபோது எங்களுடைய பாட்டன் பாட்டியையும் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. பாட்டனை விட பாட்டியை நினைத்தே  ஆக  வேண்டும். ஏனென்றால் அவர்தான் எங்கள் குலதெய்வம். எங்கள் பாட்டனை எங்கள் அப்பாவே  பார்த்தது கிடையாது. எங்களுக்கு அவரின் உருவம் என்பது ஒரு அரூபந்தான். 


நமது தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் நமது தேசத்தை விடுதலை பெற வைக்க வேண்டும் என்று உருவாக்கிய இந்திய தேசிய படைக்கு ஆட்களை சேர்க்கும்போது எனது தாத்தா அந்தப் படையில் சேர போய்விட்டார். எனது தாத்தா  இந்திய தேசிய படையில் சேருவதற்காக எனது பாட்டியை விட்டுச் சென்றபோது எனது பாட்டி வயிற்றில் எனது அப்பா 6 மாத குழந்தையாக இருந்துள்ளார். எனது பாட்டி கர்ப்பவதியாக இருந்த நேரத்தில் விட்டுச் சென்ற தாத்தா பிறகு வரவே இல்லை. எனது தாத்தா இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு பிறகு பர்மாவில் ராணுவ படையில் சேர்ந்து கொண்டார் எனவும், அங்கு பெரிய பொறுப்பில் உள்ளார் எனவும், அவர் திருமணம் செய்துகொண்டு நிறைய குழந்தைகளை பெற்று வாழ்ந்து கொண்டு உள்ளார் எனவும் பர்மா மலேசியா சிங்கப்பூரில் இருந்து வந்தவர்கள் சொன்னதாக சொல்வார்கள். ஆனால் மேற்படி தகவலில் எவ்வளவு உண்மை எவ்வளவு பொய் என்பது பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை. அவர் அதன் பிறகு திரும்பி வரவேவில்லை.  எனது பாட்டியுடன் எவ்வித தகவல் தொடர்பும் கொள்ளவில்லை. 


ஆறுமாத கர்ப்பத்தை சுமந்துகொண்டு கணவருக்கு விடைகொடுத்த அனுப்பிய எனது பாட்டி அதன் பிறகு எனது அப்பாவை ஈன்று அவரை வளர்த்து ஆளாக்கி அவருக்கு திருமணம் செய்து வைத்து அந்த திருமணத்தின் பயனாய் நானும் எனது அண்ணன் தங்கை பிறந்து வளர்ந்து ஆளானோம். தனி மனுஷியாக எங்கள் பாட்டி எங்கள் குடும்பத்தை தழைக்க வைக்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார் என்று எண்ணிப் பார்க்கின்றபோது அவர் இமயத்தை போல உயர்ந்து நிற்கின்றார். அதனால்தான் அவரை எங்கள் குல தெய்வமாக நினைக்கின்றோம். எனது பாட்டி இறக்கின்ற போது அவருக்கு என்ன வயது என்று எனக்கு உறுதியாகக் கூற இயலவில்லை. எப்படியும் 80 இருக்கும் என்று கருதுகின்றேன். ஒருமுறை கீழே விழுந்ததில் இடுப்பு மூட்டு நழுவி நடக்க முடியாமல் போனதால் படுத்த படுக்கையாக சிலகாலம் இருந்து இறந்து போனார்.


எங்களுக்கு சுமார் 5 ஏக்கர் புஞ்சை நிலம் உண்டு. இருப்பினும் விவசாயம் துணை தொழில்தான். எங்கள் அப்பாவிற்கு முக்கியத் தொழில் மரம் ஏறுதல் தான். எங்கள் அப்பா சம்பந்தமாக நினைவு கூற  எவ்வளவோ விடயங்கள் உள்ளன. இருப்பினும் விரிவஞ்சி எல்லாவற்றையும் சொல்லுவதில் இருந்து தவிர்த்தாலும், ஒரு சில விடயத்தை கட்டாயமாக சொல்லத்தான் வேண்டும். 


எங்கள் அப்பா திடகாத்திரமானவர். பனைமரக் காலத்தில் சுமார் 50 மரம் ஏறி நான்கைந்து குடம் தெழுவு இறக்குவார். எங்கள் அம்மா அதில் கருப்பட்டி காய்ச்சுவார். அதிகாலை மூன்று நான்கு மணிக்கே அவர் மரமேறச் செல்வார். இத்தொழிலில் எங்கள் அப்பா மிகவும் கெட்டிக்காரர். எங்கள் அப்பா இறக்கும் தெழுவு சுண்ணாம்பாகவோ, புளிப்பாகவோ இல்லாமல், இனிமையான இளம் தெழுவாக இருக்கும். அதில் காய்ச்சும் கருப்பட்டி தங்கம் போல் இருக்கும். சுக்கு போட்டு கருப்பட்டி செய்துதர எங்கள் அப்பாவிடம் நிறைய பேர் கேட்பார்கள். ஆனால் அப்போது கருப்பட்டிக்கு நல்ல விலை கிடையாது. கள்ளு இறக்குவதில் அதைவிட இரண்டு மூன்று மடங்கு வருமானம் வரும். கள்ளுக்கடை காலத்தில் மக்கள் அதிகம் கள்ளுக் குடித்து பழகி விட்டதால், கள்ளுக்கடையை எடுத்த பிறகும் மக்களிடம் கள்ளுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. போலீஸும் மாமுலுக்காக கள்ளு இறக்க தூண்டுவார்கள். கள்ளு இறக்க மறுத்தாலும் போலீஸ் பிடித்துச் சென்று பொய் வழக்குப் போட்டு விடுவார்கள். காலையில் நன்றாக இருக்கும் தெழுவு சில மணி நேரங்களில் புளித்து விடுவதால் அதனை கள்ளு என்று சொல்லிவிடுவார்கள்.  தெழுவு இறக்கி பொய் வழக்குக்கு  ஆளாவதை விட கள்ளே இறக்கி விடலாம் என்று மரமேறிகள் கள் இறக்க துணிந்து விடுவார்கள். காவல் நிலைய போலீஸ் கள்ளிறக்க விட்டாலும், சில சமயம் மேல் அதிகாரிகள் ரெய்டு வருவார்கள். அதுபற்றி காவல்நிலைய போலீஸ்காரர்கள் ஆள் மூலம் முன்கூட்டியே சில சமயம் தகவல் சொல்லிவிடுவார்கள். ஆனால் சில சமயம் தகவல் எதுவும் வந்து சேராது. புள்ளிவிவரக் கணக்குக்காக சில சமயம் போலீஸ் பிடித்துச் சென்று வழக்குப் போட்டு விடுவார்கள். 


தமிழ்நாட்டில் மதுக்கடையை அவ்வப்போது விட்டும் எடுத்தும் மரம் ஏறும் சமூகத்தினரை குற்றப்பரம்பரையைப் போல் ஆக்கி விட்டார்கள். ஒருமுறை போலீஸ் ரெய்டு வந்தபோது எங்கள் அப்பா வெளியில் ஓடிச் செல்ல முடியாமல் வீட்டுக்குள் கதவிடுக்கில் மறைந்து உட்கார்ந்திருந்தார். ஒரு போலீஸ் அதிகாரி தேடிச்சென்று எங்கள் அப்பாவை கண்டுபிடித்துவிட்டார். அந்த அதிகாரி மாட்டினயா என்று சொல்லிக்கொண்டு வலது கையை மடக்கி குனிந்து முழங்கையினால் ஓங்கி எங்கள் அப்பாவின் முதுகில் குத்தினார். எங்கள் அப்பா ஐயோ அம்மா என்று சப்தமாக கத்தினார். வீட்டுக்கு வெளியில் நின்றிருந்த எங்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. எல்லோரும் ஓவென்று அழுதோம். போலீஸ் ஸ்டேஷன் நீதிமன்றம் என்று சென்று திரும்பிய எங்கள் அப்பா எங்களிடம் இந்த தொழிலை மட்டும் நீங்கள் யாரும் செய்துவிடக்கூடாது. படிச்சி நல்ல வேலைக்குப் போய் விட வேண்டும். என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். 


பனைத்தொழில் ஒரு விஞ்ஞானபூர்வ தொழில். பாளையை பக்குவமாக வணக்கி அதை தினம் தினம் கொஞ்சம் கொஞ்சமாக சீவி சுண்ணாம்பு தடவி தெழுவுவாக இறக்கி அதை சத்து மிகுந்த கருப்பட்டியாக  காய்ச்சுவது ஒரு அரிய கலை தான். ஆனால் அந்த கலைத்தொழில் ஆட்சியாளர்களின் மதுக் கொள்கையால் இன்று நசிந்து போய் விட்டது. இந்தத் தொழிலைச் செய்வதை கேவலமாகக் கருதி பலரும் கைவிட்டு விட்டனர். பனைத்தொழில் செய்பவர் குறைந்ததால் பனை மரங்களும் ஏராளமாக வீடு கட்டுவதற்கும் விறகுக்கும் என்று வெட்டி அழிக்கப்பட்டுவிட்டன. ஒரு அருமையான கிராமத் தொழில் அழிந்து விடும் நிலைக்கு சென்றுவிட்டது. ஏதோ மிச்ச சொச்சங்கள் ஆக கொஞ்ச பேர் இந்த தொழிலைச் செய்து வருகின்றனர்.  தற்போது மீண்டும் பனை மரங்களை அதிகப் படுத்துவதற்காக மரம் நடுவதை போன்று ஏரி குளங்களில் பனங்கொட்டை விதைப்பதும் ஒரு சமூக சேவை ஆகிவிட்டது. 


எங்கள் மூவரையும் நன்கு படிக்க வைத்து எப்படியும் அரசு வேலை பெற வைத்து விட வேண்டுமென்று எங்கள் அப்பா மிக உறுதியாக இருந்தார். ஏதோ ஒரு சிவாஜி படத்தில் அண்ணன் தம்பி மூவரில் ஒருவர் வக்கீலாகவும்,  இன்னொருருவர் போலீஸ் அதிகாரியாகவும், இன்னொருவர் டாக்டராகவும் இருப்பார்கள். எனது அப்பாவிற்கு அது உத்வேகம் அளித்த திரைப்படம். இருப்பினும் மூன்று பேரையும் அவரால் நன்கு படிக்க வைக்க இயலவில்லை. எனது அண்ணன் பியூசி தேர்ச்சி பெற்றிருந்த போதிலும் அத்துடன் நிறுத்த  வேண்டியதாக இருந்தது. எனது அண்ணன் எனது அப்பாவிற்கு துணையாக வேலை செய்து வந்தான். அதோடு போலீஸ் வேலைக்கு விண்ணப்பித்து தேர்விற்கு சென்றான். தெய்வாதீனமாக எனது அப்பா விரும்பியபடி காவல்துறையில் சேர்ந்தான். எனது அப்பாவின் லட்சியத்தை எனது அண்ணனும் மனதிற்குள் வாங்கி அவற்றை நிறைவேற்றுவதற்காக என்னையையும் எனது தங்கையையும் படிக்க வைத்தான். நான் முதலில் ஒரு வழக்கறிஞராகி பிறகு நீதிபதி ஆனேன். எனது சகோதரி டாக்டர் ஆகவில்லை என்ற போதிலும் செவிலியர் ஆகி தலைமைச் செவிலியராக ஆனாள். எங்கள் பெற்றோரின் கனவு ஓரளவு நிறைவேறியது. 


எங்கள் அப்பா அடிக்கடி எலி அணில் முயல் வேட்டைக்கு போவார். பள்ளிக்கூட விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் எங்களையும் அழைத்துச் செல்வார். வேட்டைக்குச் செல்வதெல்லாம்  எங்களுக்கு  சாகசப் பயணம்தான்! அதே போன்று சில சமயம் ஏரி குளத்திற்கு மீன்பிடிக்க செல்வோம். வலை போட்டு விரால் மீன் பிடிப்பது மிகப்பெரிய சந்தோஷம் தரும் அனுபவங்கள். வலையில் விரால் மீன் மாட்டும் போது ஒரு இழுப்பு கைகளுக்கு தெரியும். கைகளுக்கு அந்த இழுப்பு தெரியும் போது பெரிய பொக்கிஷமே கைக்குள் வந்தது போல் மனதிற்குள் மகிழ்ச்சி அலையடிக்கும். சில சமயம் இரண்டு மூன்று கிலோ எடையுடைய பெரிய பெரிய மீன்கள் கூட எங்கள் வலையில் மாட்டும். மீன் பிடிக்கும் மற்றவர்கள் பொறாமையாக பார்ப்பார்கள். ராசிக்காரர்கள் எனவும் ராசியான வலை எனவும் சொல்வார்கள். எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கும். இந்த மீன்பிடி சந்தோசங்கள் இன்னும் கூட கனவுகளில் அவ்வப்போது வருகின்றன. 


வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை ஊரே திரண்டு போய் மீன்பிடித்த சந்தோச காலங்கள் தற்போது காணாமல் போய்விட்டன. இப்போதெல்லாம் வருடா வருடம் மீன் பிடிப்பதற்கு குத்தகை விட்டுவிடுகிறார்கள். குத்தகைக்கு எடுத்தவர்கள் அந்தந்த இடங்களில் மீன்களைப் பிடித்துச் சென்று விற்று பெரும் காசாக்குகிறார்கள். அவர்கள் கொடுக்கும் குத்தகைப் பணத்தில் ஊரின் மீன்பிடி  சந்தோசம் எல்லாம் அடகு போய் விட்டதைப் பற்றி தற்போது கவலைப்பட யாரும் இல்லை. மீன் சாப்பிட விருப்பப்படுபவர்கள் தற்போது காசு கொடுத்து வாங்கி சாப்பிடுகிறார்கள். பணத்தில் மீனை வாங்கலாம். ஆனால் அதில் மீன் பிடிக்கும் சந்தோசத்தை வாங்க முடியுமா? தற்பொழுது பண வேட்டை உலகில் கிராமங்கள் இப்படி எத்தனையோ சந்தோஷங்களை இழந்து விட்டன. 


எனக்கு சின்ன வயதாக இருக்கின்றபோது நான் நீச்சல் கற்றுக்கொள்ள மிகவும் பயந்து வந்தேன். நீச்சல் கற்றுக் கொடுக்க  கிணற்றுக்கு கூட்டி போவதாக எங்கள் அப்பா சொல்லும்போதெல்லாம்  நான் பயந்து ஓடுவேன். என்னை துரத்து துரத்து என்று துரத்துவார்கள். கடைசியில் என்னை வளைத்து பிடித்து விடுவார்கள். என்னைக் கூட்டிப் போய் கிணற்றில் தொப்பென்று தூக்கிப் போட்டு விடுவார்கள். நான் தத்தக்கா பித்தக்கா என்று மிகவும் கஷ்டப்பட்டு கை கால்களை ஆட்டி படிக்கு வந்து ஏறுவேன். ஒரு முறை குடுவை கட்டி நீச்சல் பழக்குதுவதாகச்சொல்லி கிணற்று அருகில் அழைத்துச் சென்று குடுவை கட்டாமலேயே தண்ணிக்குள் பிடித்து தள்ளி விட்டு விட்டார். எனக்கு நீச்சல் பழக்கும்  விஷயத்தில் எங்கள் அப்பா கடுமையான பயிற்சியாளராக இருந்தார். ஆனால் அவர் அன்பானவர், தன்மையானவர். அவரை வயதான காலத்தில் சிறிது காலம் முதியோர் இல்லத்தில் சேர்த்தது எனது மனதில் குற்ற உணர்வாக உள்ளதை சொல்லத்தான் வேண்டும். 

                        ( பயணம் தொடரும்....)

-------------------------------------------------------------------





Comments

Popular posts from this blog

இசை தரும் இனிய பாடல்கள் - 3

1. தொடுவானப் பறவைகள்