1. தொடுவானப் பறவைகள்

1. தொடுவானப் பறவைகள்
இப்படி ஒரு நாள் வரும் என்று நெடுநாளாய் அவன் நினைத்திருந்தான். இன்று அந்த நாள் அவன் மீது விழுந்து மலைப்பாம்பாய் சுற்றிக் கொண்டது.
காற்றில் ஒரு பெரிய உயர்ந்த வேப்பமரம் சலசலத்து ஆடி அசைந்து குதூகலித்துக் கொண்டிருந்தது. ஏதோ வரலாற்று சிறப்புமிக்க நினைவு சின்னத்தை போல் ஒரு கணம் நின்று நிமிர்ந்து பார்த்துவிட்டு அவன் வயலை நோக்கி தளர்ந்து நடந்தான்.
செல்வத்தின் தந்தை கடலைச் செடிகளுக்குத் தண்ணீர் கட்டிக் கொண்டிருந்தார். வரப்பில் ஒரு பெரியவர் நின்று கொண்டு அவருடன் பேசிக் கொண்டிருந்தார். அவரைக் கண்டவுடன் என்ன கேட்பாரோ என்று துணுக்குற்றவனாய் அங்கு வந்தான். தெரிந்த முகங்களைச் சந்திக்கும் போதெல்லாம் அவன் மனம் கொஞ்ச நாளாய் தடுமாறுகிறது.
" யாரு செல்வனா? என்னடாப்பா செஞ்சிக்கிட்டிருக்கே? "
" சும்மதான் பெரியப்பா இருக்கேன்! "
" காலேஜுக்கெல்லாம் போய் படிச்சயே! ஏதாவது வேலை கீலை கெடச்சுதா.
" முத்தண்ணே! இவன நம்பித்தா கடன உடன வாங்கி கஷ்டப்பட்டு டிகிரி படிக்க வச்சேன். என்ன புரயோசனம்? நம்மல காப்பாத்த் வேண்டிய நேரத்தல இன்று நமக்கே பாரமா இருக்கான். எங்க போயி நம்ம தலய முட்டிக்கிறது? " என்று செல்வனின் தந்தை விரக்தியோடு பாடி முடித்தார்.
" பையனுக்கு வயசாவுதே ஏதாவது பொண்ணு கிண்ணு பாத்தயா? "
" அட நீங்கொன்னு இப்ப கல்யாணத்துக்கென்ன! இப்ப கல்யாணம் பண்ணி வச்சா அவளுக்கும் சேத்து சோத்த நாமதான் போடணு " என்று சொல்லியவாறு வரப்புக்கு வந்தார் அவன் தந்தை.
" டேய்! இன்னு நாலஞ்சி பாத்திதான் இருக்கு தண்ணி கட்டு, நானும்,முத்தண்ணனும் ஊருக்குள்ளே போயிட்டு வாறோம். " என்று சொல்லியவாறு வரப்பில் நடை போட்டார். அந்த பெரியவரும் அவர் பின்னாலேயே சென்றார்.
செல்வத்தின் உள்ளத்திற்குள் அவன் தந்தையின் வார்த்தைகள் வலித்தன. ஆனால் இப்படி எத்தனையோ ரணங்களை உள்ளத்தில் தாங்கி விட்டதால், வலிகள் பழகிப் போய் விட்டன. கண்ணில் திரண்டிருந்த நீரை துடைத்துக் கொண்டு மண்வெட்டியை குனிந்து கையிலெடுத்தான் அடுத்த பாத்திக்கு தண்ணீரை திருப்பி மடை கட்டி விட்டு நிமிர்ந்தான்.
கிணற்றருகில் கவிதா நின்றிருப்பதை எதேச்சையாகப் பார்த்தான். அவளும் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
" என்னை ஏன் பார்க்கிறாள்? ஏதாவது சொல்ல நினைக்கிறாளா? அவளோடு பேசி எவ்வளவு நாளாகி விட்டது? " என்று நினைத்துக் கொண்டான்.
அவள் தண்ணீர்க்குடத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டே மெதுவாக வீட்டை நோக்கி நடந்தாள். அவள் மூன்று தடவை தண்ணீர் எடுத்துக் கொண்டு செல்வதற்குள் அவனுக்கு தண்ணீர் கட்டும் வேலை முடிந்திருந்தது.
அவன் மண்வெட்டியோடு கிணற்றை நோக்கி நடந்தான். அவள் தண்ணீர் குடத்துடன் எதிரில் வந்தாள். அவள் அருகில் வர வர அவனுக்கு மனம் 'திக்திக்' என்று அடித்துக் கொண்டது. அவள் கண்களில் நீர் கட்டியிருந்தது. உதடு ஏனோ துடித்தது.
" கவிதா! ஏன் அழறே? " என்று கேட்க எண்ணினான். ஆனால் ஏனோ வார்த்தை உதடுகளில் வரவில்லை. என்ன கேட்பது, என்ன சொல்வது என்று எதுவும் தோன்றவும் இல்லை. சிறிது நேர மௌன பார்வைகள் தாங்க முடியாத சிரமமாக தோன்றியதால், அவன் அவ்விடத்தை விட்டு அகல துவங்கினான். அவளும் தயக்கத்துடன் நகர்ந்தாள். அவன் திரும்பி பார்த்தபோது கண்களைத் துடைத்தபடி நடந்து கொண்டிருந்தாள்.
"அவளிடம் என்ன கேட்பது - என்ன பேசுவது? அதற்கெல்லாம் எனக்கு உரிமை இல்லை, தகுதியும் இல்லை" என்று எண்ணியவனாய் நடந்தான். மின்சார மோட்டாரை நிறுத்தினான். தொட்டியின் மீது பெருமூச்சோடு உட்கார்ந்தான்.
இரவு விரைந்து கொண்டிருந்தது. மீண்டும் கவிதா வருவாளா என்று இரகசியமான ஏக்கத்தோடு காத்திருந்தான். அவள் மீண்டும் வரவில்லை. இருள் பூமியை விழுங்கி விட்டது. வானம் கடுமேகம் சூழ இருந்ததால், இருள் கொடும் இருளாக இருந்தது. அவன்வீட்டிற்கு எழுந்து மெதுவான நடந்தான். வீட்டிற்கு வந்து கட்டிலில் சோர்வாக சுருண்டு விழுந்தான்.
அவன் தந்தையும் அது சமயம் வீட்டிற்கு வந்து விட்டார். அவன் தாய் அவருக்கு சோறு பரிமாறினார்.
" செல்வம்! சோறு திங்க வாப்பா! " என்றழைத்தார் தாய்.
" வேண்டாம் பசிக்கலை " என்றான் அசிரத்தையுடன்.
" வேல கிடைக்காததாலே உன்னை சோறு வேளாவேளக்கி திங்க வேண்டானு யாரும் சொல்லலே, எந்திரிச்சி சோறு திங்க வாடா! " என்று அதட்டினார் அவன் தந்தை.
முன்பெல்லாம் கோபம், பிடிவாதம், எதிர்த்து பேசுதல் எல்லாம் உடையவனாய் இருந்தவன்தான். ஆனால் இப்போது தந்தையின் அதட்டலை அலட்சியப்படுத்தும் தெம்பு அவனுக்கு இல்லை. எழுந்து வந்து சாப்பிட அமர்ந்தான்.
சாப்பிட்டு விட்டு அவன் தந்தை கட்டிலை எடுத்துப்போட்டு படுத்தார். அவனும் சாப்பிட்டு விட்டு வந்து கட்டிலில் விழுந்தான். அவன் தாயும் சாப்பிட்டுவிட்டு படுக்கையை விரித்து போட்டு விட்டு விளக்கை அணைத்து விட்டு படுத்தார்.
சற்று நேரத்தில் தந்தையின் குறட்டை ஒலி எழுந்தது. அவன் தாய் சற்று நேரம் தூக்கம் வராமல் முன்னும், பின்னும் புரண்டு படுத்தார். அவருக்கு செல்வத்தைப் பற்றிய கவலைதான் உள்ளத்துள் உருண்டது. 'எப்படி கலகலப்பா இருந்த பையன் இப்படி ஊமையா ஆயிட்டான். இவனுக்கு எப்ப ஒரு வேல கிடைக்குமோ? கடவுளுக்குத்தான் வெளிச்சம்! ' என்று அவர் மனம் மருகியது. சற்று நேரத்துள் அவருக்கும் தூங்கி விட்டதற்கு அறிகுறியாக அசைவுகளற்று இருந்தார்.
அவனுக்கு தூக்கம் வரவில்லை. மனம் புழுங்கிக் கொண்டிருந்தது. அவன் மனம் எதையாவது பற்றிக்கொள்ள துலாவுவதைப்போல் உணர்ந்தான். சுற்றிலும் வெறுமையான – எங்கோ தனித்தீவில் அனாதையாக கிடப்பதைப்போல் தோன்றியது. அவனுக்கு அவன் விழிகளில் ஈரம் கசிந்தது. தலையணையில் சில துளிகள் சரிந்து கரைந்தன. ஈரமான இடத்தை அவன் விரல்கள் ஏக்கத்தோடு மென்மையாக தடவின.
'இந்த அழுகையைத் துடைக்க அருகே யாருமில்லையே, நான் எவ்வளவு அபாக்கியவான்! என்னருகில் அவள் மட்டும் இருந்தால் நிச்சயம் என் கண்ணீரைத் துடைப்பாள் இல்லயா!' அவன் மனம் முணுமுணுத்தது.
முதன் முதலில் பெரிய வேப்ப மரத்தடியில் அவன் கண்ணீரை அவள் துடைத்த அந்த நாள் அவன் நினைவுக்கு வந்தது. அவன் நெஞ்சில் பழைய நினைவுகள் படையெடுத்தன.
* * * * * * * *
பத்து வருடத்திற்கு முன்னால். அப்போது செல்வத்திற்கு வயது பதிமூன்று. அது ஒரு சனிக்கிழமை மாலை.
செல்வம் அவன் தாய் நாமக்கல் சனிச்சந்தையில் வாங்கி வந்திருந்த மாங்காயின் ஊனைத் தின்று விட்டு கொட்டையைச் சூப்பிக் கொண்டிருந்தான். அப்போது அவன் தாய் மாமன் அடையாளம் தெரியாதளவிற்கு தாடி மீசையோடு வந்தார். அவர் கையைப் பிடித்துக் கொண்டு பதினொரு வயது கவிதாவும் வந்தாள். ஏழெட்டு வயதான மாமா பையன் சோமுவை அவன் குண்டு அத்தை இடுப்பில் வைத்துக் கொண்டு வந்தார்.
" வா தம்பி வா வா! " என்று வரவேற்று வீட்டிற்குள் அழைத்து சென்றார் அவன் தாய்.
அவன் மாமா சேலத்திலே ஒரு சிறிய ஜவுளிக்கடை வைத்திருந்து நஷ்டமாகி கடையை விற்று விட்டு இனி என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான், செல்வத்தின் பெரியப்பா வீடு நிலத்தை விற்று விட்டு வேறு ஊர் போக உத்தேசித்திருப்பது தெரிந்து கையில் இருந்த பணத்தைப்போட்டு அந்த வீடு நிலத்தை பிடித்து குடும்பத்தோடு அவன் மாமா அன்று குடியேறினார். அவன் மாமா குடும்பம் அங்கு குடியேறுவதற்கான ஏற்பாட்டில் பெரும்பங்கு அவன் தாய்க்கும் உண்டு. அவன் மாமாவுக்கு சில கெட்ட பழக்கம் உண்டு. அவையால் கெட்டு போவதை தான் அருகில் இருந்தால் தடுத்து விடலாம் என்று அவன் அம்மா நம்பினார். அவர் எண்ணப்படியே அவன் மாமா அங்கு குடி வந்தார்.
செல்வம் கவிதாவைப் பார்ப்பது அதுதான் முதல் தடவை அல்ல. பலமுறை பண்டிகை விசேஷ சமயங்களில் பார்த்திருக்கிறான். ஆனால், செல்வம் கவிதாவிடம் சரியாக பேச மாட்டான். கவிதா வலிய வந்து பேசினாக்கூட சரியாக பேச மாட்டான். ஏனெனில், அவனுக்கு அவளிடம் ஒருவித பயம், வெறுப்பு, தாழ்வுணர்வு. ஏனென்றால் அவள் மூன்றாவது படிக்கும்போது அவன் ஐந்தாவது படித்திருந்தும் அவள் ஆங்கிலத்திலும், தமிழிலும் படிப்பதை, எழுதுவதை அவனால் செய்ய முடியாது தவிப்பான். இதனால் உறவினர்கள் பலரும், 'நீ அவளை கல்யாணம் கட்டிக்க மாட்டே, அவ பெரிய பெரிய படிப்பு படிச்சி பெரிய வேலக்காரனா பாத்து கட்டிக்கப்போறா, நீ படிக்காத முட்டாளா காட்டுல கலப்ப புடிக்கப்போற' என்று அவனை கேலியும், கிண்டலும் செய்வார்கள். அவன் பள்ளிக்கூட வாத்தியாரிடம் பயப்படுவதைக் காட்டிலும் அவளிடம் மிரண்டு கிடந்தான்.
அந்த கவிதாதான் அவன் மாங்கொட்டையை சூப்பி கன்னமெல்லாம் சாறு ஒட்டியிருந்ததை பார்த்து பச்சரிசி பற்கள் பளபளக்க சிரித்து விட்டு அவன் மாமாவோடு வீட்டிற்குள் சென்றாள். அவனுக்கு அது வெட்கமாகப் போய் விட மாங்கொட்டையை வெறுப்போடு குப்பைக் குழிக்குள் வீசி விட்டு, பானையில் தண்ணீரை அள்ளி முகத்தைக் கழுவிக் கொண்டு வீட்டிற்குள் சென்று அவர்களைப் பார்க்க, பேசிக் கொள்வதைக் கேட்க வெட்கப்பட்டுக் கொண்டு சற்று தள்ளியிருந்த அவன் நண்பன் சங்கர் வீட்டுப் பக்கம் ஓடினான்.
எல்லோருடனும் கவிதா கலகலவென்று பேசினாள். எல்லோரும் அவளிடம் மிகவும் பிரியங்காட்டினார்கள். தின்பண்டங்கள் அவளுக்கு நிறைய கிடைத்தன. அவள் வந்த பிறகு செல்வத்தின் மதிப்பு அறவே குறைந்து விட்டது. "அவ எப்படி படிக்கறா பாரடா " என்று அவளுடன் ஒப்பிட்டு அவனைத் திட்டினார்கள். "அவ ஏன் இங்க வந்தாளோ? என்னுயிரை வாங்க! " என்று மனசுக்குள்ளேயே அவளைத் திட்டிக்கொள்வான்.
அப்படி ஒரு நாள் அவன் தந்தையிடம் திட்டும், அடியும் வாங்கிக் கொண்டு ஓடி வந்து அந்த பெரிய வேப்பமரத்தடியில் உட்கார்ந்து தேம்பி, தேம்பி அழுது கொண்டிருந்தான். ஒரு வழியாக அவன் அழுகை நின்று விட்டது. அதே சமயம் இருட்டு கட்டிக் கொண்டது. ' யாராவது வந்து கூப்பிட்டாத்தான் போகணும்' என்று மரத்தடியிலேயே உட்கார்ந்திருந்தான். இருட்டு அவனுக்கு பயமாக இருந்தது. ஆனாலும் பிடிவாதமாக அங்கேயே உட்கார்ந்திருந்தான். நேரம் போய்க்கொண்டே இருந்தது. யாரும் கூப்பிட வரவில்லை. 'அவ வந்த பிறகு என்ன யாரும் நினைக்கிறது கூட இல்ல, இப்ப எல்லா அவதான்' என்று நினைக்க, நினைக்க மீண்டும் அவனுக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது. தேம்பி தேம்பி அழுது கொண்டு உட்கார்ந்திருந்தான்.
அப்போதுதான் கவிதா அந்த மரத்தடிக்கு வந்தாள். அவள் அங்கு வருவாள் என்று அவன் நினைக்கவே இல்லை. அழுகையை கஷ்டப்பட்டு நிறுத்த முயன்றான். அது விசும்பலமாக உருமாறி ஒலித்தது. அவள் முன்னால் தேம்பி, தேம்பி அழ அவனுகுக்கு வெட்கமாக இருந்தது. அவள் அவனருகில் உட்கார்ந்தாள்.
"செல்வம்! ஏன் அழறே? நா உன்ன எங்கெல்லா தேடினே தெரியுமா? நீ அழுதா நானு அழுவேன். நீ அழக்கூடாது " என்று சிட்டுக்குருவிபோல் மென்மையாக பேசினாள்.
" நீ ஏ அழுவே? " என்று தேம்பியபடியே கேட்டான்.
" எனக்கு யாராச்சி அழுதா அழுகை வந்திடும்! "
" நான் அழுதாலுமா? "
" ம்! "
" நான் தெனமுதான் அழுவுறேன் ! "
" ஏன்? "
" என்ன எல்லாரும் திட்றாங்க, எங்கப்பா அடிக்கறாரு, நான் நல்லா
படிக்கலையுன்னு "
" உங்கப்பா உன்னை அடிச்சப்போ எனக்கு பாவமா இருந்தது. என்னாலதா உனக்கு இதெல்லாம்! நா நல்லா படிச்சாத்தான் உன்னை திட்டுவாங்க! இனி யாரும் உன்ன திட்ட மாட்டாங்க பரு!" என்று சொல்லியபடி அவன் கண்ணீரை துடைத்தாள். ஆனால் கண்ணீர் அவள் கண்ணில் முளைத்தன.
" இவள் எவ்வளவு நல்லவள்! இவளுக்கா நா பயந்து நடுங்கினேன்! இவள் எனக்காக அழுகிறாள், இவள் எவ்வளவு அன்பானவள்" என்று அவன் சந்தோசப்பட்டான்.
" வா! வீட்டுக்குப் போகலாம்! " என்றாள். அவன் அவளுக்கு கட்டுப்பட்டு எழுந்து நடந்தான்.
இப்படித்தான் அவர்கள் உறவு வளர துவங்கியது. பின்னர்தான் அவர்களுக்குள் எத்தனை எத்தனை விளையாட்டு....... எத்தனை எத்தனை சந்தோச பக்கங்கள்.......
'கடுங்காற்றும் மழையாகும், கடும்பிரியமும் பகையாகும்' என்பதுபோல் அவர்கள் வாழ்க்கையும் இரு துருவங்களாக மாறியது காலத்தின் கோலந்தான்.
அவன் மாமாவின் குடிப்பழக்கமும், துடுக்குத்தனமான பேச்சும் ஊருக்குள் சண்டை சச்சரவாக வளர்ந்தன. விவசாயத்திலும் கவனிப்பு இல்லாததால் விளைச்சல் சரியில்லை. கடன் வாங்கி கட்ட முடியவில்லை. பொருளாதார முடை அவன் மாமாவை மேலும் குடி வெறியனாக்கியது.
நல்லவனாக்க எண்ணிய அக்காவின் நம்பிக்கை தளர்ந்தது. பணம் கொடுக்கல், வாங்கலில் மன வருத்தம் நேர்ந்தது. வாய்க்கால், வரப்பு, வாசல் தகராறெல்லாம் மெல்ல, மெல்ல தலை தூக்கின. செல்வம், கவிதா விளையாட்டுக்கள் தடை செய்யப்பட்டன. சின்ன, சின்ன விசயங்களெல்லாம் பூதாகரமாக வெடித்தன. சாடைகள் எதிரொலித்தன. கைகலப்பு நேர்ந்தன. காவல் நிலையம், நீதிமன்றம் எல்லாம் ஏறி, இறங்க நேர்ந்தது. இவைகளின் விளைவு இரண்டு குடும்பங்களுக்கு இடையே இந்திய – பாகிஸ்தான் நிலமை தோன்றியது.
சிறு வயதில் செல்வம், கவிதாவிடையே சிறு குருத்தாய் முளைத்த அன்பு, காலத்தில் பரிணாமம் காதலாய் வளர்ந்தது. ஆனால் குடும்பங்களிடையே பகை உருவானது. அவர்கள் காதலின் துரதிருஷ்டம்.
நீண்ட நேரம் அவனுக்கு தூக்கம் வரவே இல்லை. எத்தனை, எத்தனையோ எண்ணங்கள் பீறிட்டுக் கொண்டிருந்தன. அந்த வேப்ப மரத்தடியில் இப்போதும் போய் அழ வேண்டும் என்று அவனுக்கு தோன்றியது. அந்தவேப்ப மரத்தடியில் எத்தனையோ தடவை அழுதிருக்கிறான். அந்த வயது முதிர்ந்த வேப்பமரம் அவனுக்கு ஆறுதல் தரும் ஜீவனாக நின்றிருந்தது.
அவன் எழுந்து வீட்டிலிருந்து வெளியில் வந்து வேப்ப மரத்தை நோக்கி நடந்தான்.
வானத்தில் பால்போல் முழு நிலவு.
குளிர்ந்த இரவு.
மெல்லிய காற்று.
வேப்ப மரம் லேசாக சல, சலத்துக் கொண்டிருந்தது. அந்த வேப்ப மரத்தடியில் யாரோ நிற்பது தெரிந்தது. அவனை நோக்கி அந்த உருவம் நடந்து வந்தது.
அவன் உதடுகள் மெதுவாக " கவிதா " என்று உச்சரித்தது. அவள் அருகில் வந்ததும் அவன் அவளைக் கட்டி அணைத்துக் கொண்டான்.
" கவிதா! "
" ம் "
சிறிது நேரம் வார்த்தைகள் விலகி நின்று வேடிக்கை பார்த்தன.
" திங்கட்கிழமை எனக்கு கல்யாணம்! "
" தெரியும்! "
" நா உங்களத்தா கல்யாணம் செஞ்சுக்குவேன்... உங்களப் பிரிஞ்சு என்னால வாழ முடியாது! "
" நான் என்ன செய்வேன்? எனக்கொரு வேல கெடைக்கலயே! "
" வேல கேடைக்கற வரைக்கும் இனி என்னால காத்துகிட்டு இருக்க முடியாது "
" நம்மரண்டு வீட்டுக்கும் சண்டை நம்ம கல்யாணத்த யாரும் சம்மதிக்க மாட்டாங்க " நாம வீட்டை பகைச்சிகிட்டுத்தான் கல்யாணம் செஞ்சிக்கணும். வீட்டையும் பகைச்சிகிட்டு வேலயும் இல்லாம நா உன்ன வச்சி எப்படி காப்பாத்துவேன் கவிதா! "
" அப்ப நாம ரண்டு பேரும் செத்திடலாம், நம்ம சேத்து வச்ச இந்த வேப்பமரத்திலேயே தூக்கு போட்டு செத்திடலாம்! "
அதன்பிறகு இருவரும் பேசாமல் வெகுநேரம் அழுதார்கள்.
" நமது காதல் வாழ வேண்டுமானால், நாம சாக வேண்டும். நாம் வாழ வேண்டுமானால் காதல் சாக வேண்டும்! "
" காதல் வாழட்டும்! " நாம் சாவோம்! "
மறுநாள் காலை வழக்கம்போல்தான் விடிந்தது. ஆனால், அந்த வேப்பமரம் மட்டும் ஊரே வியந்து பார்க்கும் கண்காட்சி பொருளாக புன்னகைத்துக் கொண்டிருந்தது.
அந்த வேப்ப மரத்தில் இணை பறவைகள் உயிரில்லாமல் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தன.
பின்குறிப்பு:
இந்தக் கதையின் முடிவு பொய்யானது - கற்பனையானது - உண்மையில் நடந்தது இதுவல்ல. நடந்தது என்னவென்றால் அவளுக்கு எந்த இடையூறுமில்லாமல் அந்த திங்கட்கிழமையில் திருமணம் நடந்தது. அவன் இன்னும் 'இன்டர்வியூக்கு' பிணமாக போய்க் கொண்டுள்ளான்.
இந்த பொய்யான – உண்மையான இரண்டு முடிவுகளுமே எனக்கு பிடித்தமானது அல்ல. ஆனால் பிடித்தமான முடிவுகள் மட்டுமே மனித வாழ்க்கையில் நிகழ்வதில்லையே! சில சமயம் பிடித்தது நடக்கிறது! பல சமயம் பிடிக்காததுதானே நடக்கிறது. வாழ்க்கை என்பது தொடுவானத்தை நோக்கி பறந்துகொண்டேயிருப்பதுதானே?
******************************************
Comments
Post a Comment