5. வியப்பு தரும் மந்திர தந்திரங்கள்




அலைபேசியை எடுத்து பார்த்தபோது  ஒரு இலக்கிய நண்பர் அழைப்பது தெரிந்தது. அழைப்பை ஏற்று பேசினேன். ஸ்டேட் பேங்கில் வேலையில்  இருப்பதாகக் கூறி ஏமாற்றி தனது மகளை திருமணம் செய்து கொண்ட மருமகனைப்பற்றிய   உண்மை தெரிந்து தனது மகள் தனது வீட்டுக்கு வந்துவிட்டதாகவும், மகளின் 50 பவுன் நகைகள் மருமகன் வீட்டில் உள்ளதாகவும், அதனை எப்படி பெறுவது எனவும், திருமணம் செல்லாது என வழக்குப் போட்டு விடலாமா எனவும், ஏற்கனவே அவர் என்னிடம் ஆலோசனை கேட்டிருந்தார்.  ஸ்டேட் வங்கியில் வேலை என்று உண்மையாகவே பொய் சொல்லி ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார்களா என்று நன்கு விசாரித்து பாருங்கள் எனவும், வேறு வேலைக்குச் செல்ல வாய்ப்பு ஏதேனும் உள்ளதா என்று பாருங்கள் எனவும், திருமணம் செல்லாது என வழக்குப் போடுவதை அவசரப்பட்டு செய்ய வேண்டாம் எனவும், மருமகன் நல்லவரா இல்லையா என்பதை நன்கு விசாரித்து முடிவு செய்யுங்கள் எனவும், இது குடும்ப பிரச்சனை, ஆத்திர அவசரத்தில் முடிவு செய்து பிரச்சனையை தீவிரப்படுத்த வேண்டாம் எனவும், இருவரையும் நல்லபடியாக மீண்டும் வாழ வைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பதை நன்கு பரிசீலித்து முடிவு செய்யுங்கள் எனவும் ஆலோசனை கூறி இருந்தேன். 


அவர் பரஸ்பர நல விசாரிப்புக்கு பிறகு விசயத்தை சொல்ல வந்தார். தனது மருமகன் ஸ்டேட் வங்கியில்  வேலை செய்தது உண்மைதான் என தெரிய வந்தது எனவும், ஆனால் அவர் கிரிடிட் கார்டு பிராசஸ் செய்யும் வேலையில் இருந்து உள்ளார் எனவும், அது அவுட்சோர்சிங் முறையில் செய்யப்படுவது எனவும்,  ஒப்பந்த காலம் முடிந்ததால் தனது மருமகனுக்கு வேலை போய்விட்டது எனவும், மீண்டும் அதே வங்கியில் அவர் பணிபுரிந்த அவுட்சோர்சிங் கம்பெனி ஏடிஎம் பராமரிப்பு பணியை அவுட்சோர்சிங் எடுத்து உள்ளது எனவும், மீண்டும் அவருக்கு வேலை கொடுத்துள்ளார்கள் எனவும், மருமகன் வீட்டில் இருந்து வந்து சமாதானம் பேசி தனது மகளை நல்லபடியாக அழைத்துச் சென்றுவிட்டார்கள்  எனவும், தற்போது தனது மகள் முழுகாமல் உள்ளாள் எனவும், உங்கள் ஆலோசனைப்படி பொறுமையாக இருந்ததால், தனது மகளின் வாழ்க்கை நல்லபடி ஆகியுள்ளது எனவும், மிக்க நன்றி எனவும் கூறினார்.  நல்லது உங்கள் மகளுக்கு அருமையான குழந்தை பிறக்க நல்வாழ்த்துக்கள் என்று கூறி அலைபேசியை அணைத்தேன். 


பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் எல்லாமே ஒப்பந்த தொழிலாளர் முறையிலும், அவுட்சோர்சிங் முறையிலும் வேலைக்கு ஆட்களை நியமனம் செய்வதை செய்து வருகின்றன. நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் பணி பாதுகாப்பு எதுவும் இல்லாமலே இதில் பணிபுரிபவர்கள் பணி செய்கிறார்கள். வேலையும் நிரந்தரம் கிடையாது. தொடர்ந்து பணிபுரிவது என்பது ஒப்பந்ததாரர் மற்றும் அவுட்சோர்சிங் ஏஜென்சிகளின் தயவில்தான் உள்ளது. இப்படி பணி புரிவார்கள் நமது நாட்டில் ஏராளமாக உள்ளார்கள். இவர்கள் வேலை உள்ளவர்கள். ஆனால் எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்கு அனுப்பப்பட வாய்ப்புள்ளவர்கள். இவர்களின் வேலையும் கடினமாகத்தான் இருக்கும். இப்படிப்பட்ட வேலைகளை நம்பி இருக்கும் இவர்களுடைய வாழ்க்கை திரிசங்கு சொர்க்கங்கள்தான்!

                            *************

சன் டிவியின் சித்தி 2 சீரியல் வரை பார்த்துவிட்டு அவரவர் படுக்கைக்குச் சென்றோம். நான் ஹாலில் படுத்தேன். நள்ளிரவு தூக்கம் தெளிந்து கழிவறை சென்று விட்டு வெளியே வந்தபோது எனது படுக்கைக்கு அருகில் இருந்து ஒரு சாணி பூரான் ஓடுவதைப் பார்த்து அதிர்ந்தேன். அது நான் தரையில் விரித்திருந்த எனது படுக்கைக்கு அடியில் சென்று மறைந்து கொண்டது. அதனை என்ன செய்வது என்ற கேள்வி என் மனதில் எழுந்தது. நான் வீட்டில் உள்ள மற்றவர்களை எழுப்ப விரும்பவில்லை. நானே ஏதேனும் செய்ய வேண்டும் என்று எண்ணினேன். 


நான் தெரிந்து உயிர்களை வதைக்க விரும்புவது இல்லை. தெரியாமல் எவ்வளவு உயிர்கள் நம்மால் வதைக்கப்படுகின்றன. அதனை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் தெரிந்து உயிரை வதைப்பது மனசுக்கு  ஒப்புவதில்லை. அதுவும் அண்மை காலங்களில் காந்தியத்தை படித்து வருவதால் அகிம்சை உணர்வுகள் அதிகம் ஏற்பட்டு வருகின்றன. சிறுவயதில் எலி அணில் பிடித்தது, மீன் பிடித்தது எல்லாம் உண்டுதான். பாம்பு தேள் எல்லாம் அடித்து இருக்கிறேன். இல்லை என்றால் நம்மை கடித்து விடும் என்று பயந்து அடித்திருக்கிறேன். ஆனால் விபரம் வந்தபிறகு ஏற்கனவே கழிவறை பேசினில் தண்ணீரில் தவித்த பல்லியை எடுத்து வெளியே விட்டிருக்கிறேன். சாலையில் வெயில் தவித்த புழுவை எடுத்து சாலையோரத்தில் விட்டிருக்கிறேன். ஆனால் மட்டன் சிக்கன் சாப்பிடுவதை இன்னும் விட்டுவிடவில்லை. கல்லூரி காலத்தில் ஒரு முறையும், ஓரிரு ஆண்டுக்கு முன்பு ஒரு முறையும் விட்டுவிட முயன்றுள்ளேன். ஆனாலும் சிறிது கால விரதத்துக்கு பிறகு அவை முறிந்து விட்டன. அசைவம் சாப்பிடுவது ஆர்வத்தைத் தூண்டும் அனுபவமாக மனதிற்குள் பதிந்து கிடக்கிறது. அது அவ்வப்போது ஆசையைத் தூண்டுகிறது. விருப்பமான பழக்கமான ஒன்றைவிடுவது கடினம் தான்! ஆனால் பல் போனால் சொல் போகும் என்பது போல் பற்கள் போய்விட்டால் அசைவம் சாப்பிடுவது கடினம்தான்! அதன்பிறகு விரும்பினாலும் அசைவம் சாப்பிட முடியாது. ஆனால் அதுவரையிலும் சாப்பிடலாம் என்றில்லாமல் கூடிய விரைவில் விட்டுவிட வேண்டும் என்றே இருக்கிறேன்.


இந்த சாணிபூரானை என்ன செய்வது? விஷமுள்ள பூச்சி. கடித்தால் மிகுந்த வலி தரும் பாதிப்புகளை தரக்கூடியது. அதனால் மிகுந்த எச்சரிக்கையுடன் தான் அதனை அணுக வேண்டும். ஆனால் அதனை அடித்துக்கொல்ல எனக்கு மனசு வரவில்லை.  ஏற்கனவே என்னை இரண்டு முறை தேள் கொட்டியுள்ளது. முதல் முறை எனது பள்ளிக்கூட பைக்குள்  இருந்து கையில் கொட்டி விட்டது. மிகவும் கடுமையாக வலித்தது. ஒரு பாடம் போடுபவர் பாடம் போட்டு கடித்த இடத்தில் திருநீர் வைத்துவிட்டார். கடுமையான வலி உடனே நின்று விட்டது.  இரண்டாவது முறை சோளத்தட்டு போர் வேயும் போது சோளத்தட்டையிலிருந்து முதலில் காலிலும் பிறகு கையிலும் கொட்டிவிட்டது. அப்போது எனது அம்மா என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்று ஊசி போட்ட பிறகு வலி நின்றது. மூன்றாவது முறை இரவு நேரத்தில் ஏதோ காலில் கடித்து விட்டது. அது தேளா, பாம்பா என்று தெரியவில்லை. அதற்கு பண்டுதகாரர் பச்சிலை வைத்தியம் செய்தார். மூன்றுவித வைத்தியமும் ஒரே மாதிரியான பலன் கொடுத்தன. ஆனால் பாடம் போட்டு வலி மாயமானது நம்பமுடியாத அளவிற்கு வியப்பளித்த எளிய வைத்தியமாகும்.


ஒரு முறை எனது பள்ளிக்கூடத்திற்கு ஒரு மேஜிக் மேன் வந்தார். அவர் ஒரு சிஷ்யரை அழைத்து வந்தார். அவர் அந்த சிஷ்யரை மந்திரத்தால் தரையில் இருந்து எழும்பி அந்தரத்தில் படுக்க வைத்தார். அதை சிலர் மேஜிக் என்றார்கள். கண்கட்டி வித்தை என்றார்கள். சிலர் தந்திரம் என்றார்கள். சிலர் ஹிப்னாடிசம் என்றார்கள். ஆனால் அதை இன்று வரை என்னால் எப்படி என்று புரிந்து கொள்ள இயலவில்லை. பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய நூற்றுக்கணக்கானவர்களையும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரி கண்களைக் கட்டி ஒரு காட்சி தெரிகின்றவாறு வித்தை செய்வதென்பது நிச்சயமாக ஒரு அரிய சக்தி தான் என்று நினைக்கிறேன். அப்படி செய்யும் சக்தி படைத்தவர்கள் நாட்டில் எவ்வளவோ நல்ல காரியங்களை செய்யலாமே? ஏன் செய்வதில்லை? என்ற எண்ணமும் ஏற்பட்டது. 


இவ்வளவு எண்ணங்களும் மனதிற்குள் எழுந்து கொண்டிருந்த நேரத்தில் நான் ஒரு குச்சியை தேடி எடுத்து வந்தேன். என்னுடைய படுக்கையை  மெதுவாக கதவருகில் இழுத்துச் சென்று வேகமாக மேலே தூக்கி எறிந்தேன். படுக்கைக்குக் கீழே பதுங்கி இருந்த சாணி பூரான் வெளிப்பட்டு ஓடியது. குச்சியால் அதனை தடுத்து தள்ளி ஒருவழியாக கதவுக்கு வெளியே போக வைத்தேன். கடித்திருந்தால் பெரும் வலி ஏற்பட்டு இருக்கும். நல்லவேளை அப்படி எதுவும் நேரவில்லை. அதுவும் சென்றுவிட்டது. பொதுவாக தேள் பாம்பு பூரான் எல்லாம் அவற்றுடன் நாம் அறிந்தோ அறியாமலோ தீண்டுதல் செய்யும் நேரத்தில்தான் கடித்து விடுகின்றன. அவற்றுக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்கும் நேரத்தில் அவை நம்மைத் தேடி வந்து ஒன்றும் கடிப்பதில்லை. சொல்லப்போனால் அப்படி நேருவது ஒரு விபத்துதான். நல்ல வேளை  இன்று எனக்கு அப்படி ஒரு விபத்து நேரிட வில்லை. அப்படி நேராமல் காத்ததற்கு நான் இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டேன். 


காலையில் நேரமாக எழ வேண்டும். ஏனென்றால் எனது மூத்த மகன் அரசு பணித் தேர்வு எழுதச் செல்கின்றான். வாழ்த்தி வழி அனுப்ப வேண்டும். அதுமட்டுமல்லாமல் அப்பாவிற்கு ஓராண்டு நினைவு நாள் வருகிறது. அதற்கான காரியங்கள் செய்வதற்கான முன் ஏற்பாட்டு பணிகளுக்கு துணை புரிய வேண்டும். ஆதலால் காலையில் நேரமாக எழுவோம் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு தூங்கச் சென்றேன். 

                            ( பயணம் தொடரும்...)

-------------------------------------------------------------------

Comments

Popular posts from this blog

6. பாட்டி எங்கள் குலதெய்வம்

இசை தரும் இனிய பாடல்கள் - 3

1. தொடுவானப் பறவைகள்