4. கிராமத்து நினைவுகள் இனிமையானவை
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நகரத்திற்கு வெளியே அய்யம்பாளையத்திற்கும் பொரச பாளையத்திற்கும் இடையே கிருஷ்ணாபுரம் எதிரில் கிழமேல் நாமக்கல் திருச்செங்கோடு சாலைக்கு வடக்கே அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதிமன்றம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் இதர அரசு அலுவலகங்கள், அரசு குடியிருப்புகள் எல்லாம் அந்த சாலைக்கு வடபுறத்தில் அமைக்கப்பட்டுள்ளன. சாலைக்கு தென்புறத்தில் உள்ள நிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக பிரித்து போடப்பட்டு இன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக புதிய புதிய வீடுகள் நிறைய வந்துவிட்டன. இருப்பினும் அந்தப் பகுதி இன்னும் முழுமையான நகரம் ஆகிவிடவில்லை. பரந்து விரிந்த கிராம பகுதியை ஒட்டியே வளர்ந்து வரும் நகர பகுதியாக தற்போது உள்ளது. நாங்கள் குடி இருக்கும் வீடு அமைந்துள்ள பொரச பாளையம் கிராமப்புறமாகவே உள்ளது.
அங்குள்ள நிலங்களில் சோளப்பயிர்களும், நிலக்கடலையும் பயிரிடப்பட்டுள்ளன. நிலங்களின் வரப்புகளில் உயிர் வேலிகள் அமைந்திருந்தன. முன்பெல்லாம் வரப்புகள் கரைகளில், இட்டேரி பாதைகளின் இருமருங்கும் மரங்களும் செடிகளுமாக பெரிய பெரிய உயிர் வேலிகள் இருக்கும். அன்றிருந்த அப்படிப்பட்ட உயிர் வேலிகளில் கோவை செடிகள் படர்ந்து வளர்ந்திருக்கும். அதில் சிவப்பு கோவைப் பழங்கள் ஆங்காங்கே தொங்கிக்கொண்டிருக்கும். கிளிகளும் மற்ற பறவைகளும் அதனை சுவைத்துக்கொண்டு பாடல் இசைத்துக் கொண்டிருக்கும். பறவைகள் விலங்குகள் தவளைகள் போன்றவற்றின் ஒலிகள்தான் கிராமத்தின் அடையாளங்கள். கிராமத்தின் ஜீவன்கள் என்று கூட சொல்லலாம்.
அன்றிருந்த அப்படிப்பட்ட உயிர் வேலிகளை நிலங்களின் பரப்பை அதிகப்படுத்த வேண்டும் என்ற ஆசையில் நிறைய கிராம மக்கள் எடுத்து அழித்துவிட்டார்கள். எங்கள் கிராமத்தில் எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த நிலத்துக்காரர் சாலையோரம் கற்றாழை மரங்கள் வரிசையாக நின்றிருந்த உயர்ந்த வேலியை வெட்டிப் போட்டது அப்போது எனக்கு நினைவுக்கு வந்தது. கற்றாழை மரங்களில் வேர்கள் பெரிது பெரிதாக உருண்டு திரண்டு இருக்கும். அவற்றை தோண்டி எடுத்து வந்து அடுப்பெரித்தபோது அது பெட்ரோலை ஊற்றியது போல் பற்றி எரிந்ததைப் பார்த்து பரவசப் பட்டதும் நினைவுக்கு வந்தது.
நான் குடி வந்துள்ள பகுதியும் அப்படிப்பட்ட கிராமப் பகுதி தான். ஆங்காங்கே உள்ள மரங்களில் செடிகளில் பறவைகள் குருவிகள் அமர்ந்து இருந்து அந்த மாலை நேரத்தில் எழுப்பிய ஒலிகள் மனதை பரவசப்படுத்தின. நான் நடைப்பயிற்சி சென்ற அந்த சிறிய சாலையில் ஆங்காங்கே சின்ன சின்ன உயிர் வேலிகள் தென்பட்டன. அதில் கோவை செடிகளும் படர்ந்திருந்தன. சில கோவை பழங்களும் சிவப்பாய் தொங்கிக் கொண்டிருந்தன. எட்டும் உயரத்தில் இருந்த சில கோவைப் பழங்களைப் பறித்து சுவைத்தபோது பழைய கிராமத்து நினைவுகள் எல்லாம் நெஞ்சுக்குள் வளைய வந்தன.
எங்கள் வீட்டிற்கும் நானும் எனது சகோதர சகோதரிகளும் படித்த பள்ளிக்கூடங்களுக்கும் இடையே ஒரு மைல் தூரம் இருக்கும். ஒன்பதாவது பத்தாவது படிக்கும் வரை நடந்துதான் பள்ளிக்கூடப் பயணம். போகின்ற வழியில் உள்ள புளியமரத்தில் புளியங்கா அடிப்போம். எலந்த மரத்தில் எலந்தப்பழம் பொறுக்குவோம். வேப்பமரத்தில் பிசின் எடுப்போம். ஊஞ்ச மரத்தில் குருவி முட்டை எடுப்போம். ஆலமரத்தில் கிளையைப் பிடித்துத் தொங்குவோம். காட்டுப்பாளையம் பெரிய கவுண்டர் வீட்டு பண்ணைக்குள் பூந்து நகபழங்களும், நெல்லி பழங்களும் பொறுக்கி வருவோம். கள்ளிப்பழம் சாப்பிட்டு நாக்கை சிவப்பாக்கி ரசிப்போம். நீலப் பழச்செடியில் நீலப் பழம் பறித்து சாப்பிட்டு நாக்கை நீலமாக்கி மகிழ்வோம். விடுமுறை நாட்களில் எலி, அணில் வேட்டை போவோம். சில சமயம் குளத்தில் இறங்கி வலை போட்டு மீன் பிடிப்போம். பனம்பழக்காலத்தில் அதிகாலையில் போட்டி போட்டுக்கொண்டு பனம்பழம் பொறுக்கி வருவோம். வேப்பம்பழக் காலத்தில் வேப்ப மரம் ஏறி வேப்பம்பழம் சுவைத்து துப்புவோம்.
வேலிகளில் ஓடும் ஓணான், உடும்புகளை துரத்தி விளையாடுவோம். சில சமயம் வேலியில் தொங்கும் பச்சை பாம்பை பார்த்து பயந்துபோய் ஓடி வந்திடுவோம். மரங்களில் தொங்கும் கொம்புத்தேன் கூட்டில் கல்விட்டு சொட்டும் தேனை குடிக்க ஆசைப்பட்டு தேனீ கொட்டு வாங்கி வருவோம். புதரில் இருந்து பாய்ந்து ஓடும் முயலைத் துரத்தி மூச்சு வாங்குவோம். பாறை இடுக்கில் படுத்திருக்கும் நரியின் முகத்தில் முழிக்க பல நாள் முயன்று ஏமாந்து வந்திருக்கோம். கிணற்றில் குதித்து நீச்சல் அடிப்போம். குட்டையில் குதித்து கும்மாளம் அடிப்போம்.
எங்களின் விளையாட்டும் அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கும். சிறிது காலம் பட்டம் பறக்க விடுவோம். சிறிது காலம் காத்தாடி விடுவோம். சிறிதுகாலம் கபடி விளையாடுவோம். சிறிது காலம் நொண்டி விளையாடுவோம். சிறிது காலம் பல்லாங்குழி விளையாடுவோம். சிறிது காலம் அச்சாங்கல் விளையாடுவோம். சில சமயம் தாயக்கட்டை விளையாடுவோம். சில சமயம் கோழிக்குண்டு விளையாடுவோம். சில சமயம் கிட்டிப்புள் விளையாடுவோம். சில சமயம் வரிசை கல் அடித்து விளையாடுவோம்.
பொன்வண்டு பிடித்து தீப்பெட்டியில் அடைத்து முட்டை போடக் காத்திருப்போம். புத்தகத்திற்குள் மயிலிறகு வைத்து குட்டி போட பார்த்திருப்போம். பள்ளிக்கூட பாடம் என்றால் பயந்து நடுங்குவோம். வாத்தியாருக்கு காய்ச்சல், பேதி வர கடவுளை கும்பிடுவோம். கிராமத்து திருவிழாவிற்கு போனால் ராட்டின தூரி, வானவேடிக்கை. நகரத்து திருவிழாவிற்கு போனால் எம்ஜிஆர், சிவாஜி திரைப்படங்கள். தினந்தினமும் சந்தோசமாய் கழிந்த இனிய காலங்கள் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வந்தன.
இந்தக் காலத்து பையன்களுக்கு இந்த விளையாட்டெல்லாம் என்னவென்றே தெரியாது. இந்தக் காலத்து பையன்களுக்கு கம்ப்யூட்டர், செல்போன், டிவியே விளையாட்டு உலகமாக உள்ளது. அந்தக் காலத்து பையன்களுக்கு வீடு, பள்ளிக்கூடத்தை தாண்டினால், உலகமே விளையாட்டு மைதானமாக இருந்தது. இனிய நினைவுகளுடனான நடைப்பயிற்சியை நிறைவாக்கி வீடு வந்து சேர்ந்த போது, மாமா மகனும் அவரது மனைவியும் எங்கள் வீட்டுக்கு வந்து இருந்தார்கள்.
அதிக நடமாட்டம் இல்லாமல் வீட்டில் இருந்த எனது அம்மாவை பார்த்துப் பேசிவிட்டு வந்தார்கள். எனது மனைவி கொடுத்த ஆப்பிள் துண்டுகளை ஒன்றிரண்டு மட்டும் எடுத்துக்கொண்டு போதுமென்று நாகரிகமாக சொன்னார்கள். பரஸ்பரம் குடும்ப நிலவரங்களைப் பற்றி பேசத் துவங்கினோம். அவரின் மூத்த மகன் பொறியியல் பட்டம் பெற்றுவிட்டு சொந்தக்காரர் வீட்டில் விசைத்தறி பட்டறையில் பணி செய்து வருவதாகவும், இளைய மகன் பட்டப்படிப்பு முடித்து கோழிப் பண்ணைகளுக்கு மருந்து கொடுக்கும் வேலைக்குப் போய் வருவதாகவும் சொன்னார். தானும் பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் டீசல் அடிக்கும் பணிக்குச் சென்று வருவதாக சொன்னார். அவர்கள் பையன்கள் பார்க்கும் வேலைகள் படிப்புக்கேற்றதோ, வாழ்க்கைக்கு தேவையான வருமானத்தை தரக்கூடியதோ அல்ல என்பது தெளிவானது.
இப்படித்தான் நமது நாட்டில் பெரும்பாலான இளைஞர்கள் படிப்புக்கு சம்பந்தமில்லாத வேலைகளில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். படிப்புக்கேற்ற வேலை கிடைக்க வேண்டும் அல்லது வேலைக்கேற்ற கல்வி கொடுக்கப்பட வேண்டும். இரண்டும் கெட்டானாய் நமது நாட்டுக் கல்வியும் வேலையும் உள்ளது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. பொறியியல் படிப்பிற்கு படையெடுத்துச் சென்ற காலம் மலையேறிவிட்டது. மருத்துவக் கல்வி மட்டும் இன்னும் மயக்கம் தருவதாக உள்ளது. இருப்பினும் நீட் வந்து கனவுகளை கலைத்து கொண்டுள்ளது. எந்தப் படிப்புக்கும் எந்த வேலையும் உத்தரவாதம் இல்லை என்ற நிலையில் கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டது போல் எதையும் நம்பிக்கையின்றி படித்துக் கொண்டிருக்கிறார்கள் இளைஞர்கள். அரசுப் பணித் தேர்வுகளில் ஏதேனும் வேலை பெற்றுவிடலாம் என்ற கொஞ்ச நஞ்ச கனவுகளுடன் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.
சின்னவன் வந்துவிட்டான். போனில் அழைக்கிறான். வருகிறோம் என மாமன் மகனும் அவரின் மனைவியும் புறப்பட்டார்கள். அவ்வப்போது வாருங்கள்! நாங்களும் வருகிறோம். சமயம் கிடைக்கும் போது பையன்களை வரச் சொல்லுங்கள்! என்று வழியனுப்பினோம்.
அப்போது எனது அலைபேசி ஒலித்தது. அதனை எடுத்துப் பேச அதன் அருகில் நான் சென்றேன்.
(பயணம் தொடரும்...)
-------------------------------------------------------------------
Comments
Post a Comment