3. விதையே நீ விழித்தெழு!
3. விதையே நீ விழித்தெழு!
நீ பழத்திற்குள்
செழிப்பாக
இருந்தாய்!
பச்சைக்கிளி
உன்னை
பக்குவமாகக்
கொத்தி
எடுத்துக்கொண்டது!
வெகுதூரம்
பறந்து சென்று
எச்சத்தில்
உன்னை
இறக்கி விட்டது!
அங்கு
விழுந்து கிடந்த
உன்னை
ஆசையாக தூக்கி
காற்று
சுமந்து சென்றது!
அது
வலு இழந்த
இடத்தில்
உன்னை
வைத்து விட்டு
மறைந்து போனது!
ஆனால்
என்ன
துரதிர்ஷ்டம்?
அந்த இடம்
ஒரு பாறையாக
போய்விட்டது!
அங்கு
வெயிலில் காய்ந்து
கருகிக் கொண்டிருந்த
நேரத்தில்
மழை பெய்து
உன்னை
நகர்த்திச் சென்று
மண்ணிடம்
கொண்டு சேர்த்தது!
வளமான
மண்ணைச்
சேர்ந்த பிறகு
தாயிடம்
வந்துவிட்டதாய்
உளமாற
நீ மகிழ்ந்தாய்!
அந்த மகிழ்ச்சியின்
மயக்கத்திலேயே
நீண்டநாள்
கண்ணயர்ந்து
தூங்கி விட்டாய்!
உறங்கியது
போதும்
உயிரே!
மண்ணுக்குள்
இறங்கு!
நீரை
நீ உறிஞ்சு!
உன் கருவை
நீ உசுப்பிவிடு!
முளைவிட்டு
மண் கீறி
உரம் பெற்று
வான் பார்க்க
தலைதூக்கு!
பச்சை
துளிர் பார்க்க
ஆசை இல்லையா?
செடியாகி மரமாகி
பூவாகி பிஞ்சாகி
காயாகி கனியாகி
வாழையடி வாழையாக
வம்சம் விருத்தி செய்ய
இயற்கை அறிவு
இன்னும் உன்னை
எழுப்பவில்லையா?
விதையே நீ
விழித்தெழு!
மழை
பெய்திருக்கிறது!
சூரிய கதிர்கள்
சுகமாக வருடுகிறது!
காற்று இதமாக
தவழுகிறது!
காலம்
அழைக்கிறது!
உறங்கியது
போதும்!
விதையே!
நீ விழித்தெழு!
உனக்கான கடமை
ஓராயிரம்
காத்திருக்கிறது!
ஆதலால்,
விதையே நீ
விழித்தெழு!
*****
Comments
Post a Comment