3. பணம் படுத்தும் பாடு

 


நாமக்கல்லில் நான் வாடகைக்கு பார்த்த வீட்டின் உரிமையாளர் சிங்கப்பூரில் உள்ளாராம். அவரின் அக்காதான் வீட்டுக்கு தற்போது பொறுப்பாளர். ஏதோ ஒரு வங்கியில் பணிபுரிகிறார். அந்த வீட்டின் மேல் தளத்தில் வாடகைக்கு குடியிருக்கும் ஹரி அந்த அம்மாவின் அலைபேசி எண்ணை கொடுத்து பேசச் சொன்னார். அந்த அம்மாவிடம் பேசியபோது அவர் ரூ 50 ஆயிரம் முன்பணம், ரூ. பத்தாயிரம் வாடகைக்கு அவருடைய தம்பி விட சொன்னார் எனவும்,  நீங்கள் குறைத்து கொடுக்க  கேட்பதால் ரூ 40 ஆயிரம் முன் பணம், ரூ. 9000 வாடகைக்கு விடலாம் எனவும் கூறினார். இன்னும் கொஞ்சம் குறைத்துச் சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கு வாடகைக்கு ரூ. 8500, முன்பணம் குறையாது என்று கூறிவிட்டார். வாடகை ரூ 8500க்கு ஒத்துக்கொள்வதாகவும், ஆனால் முன்பணத்தை மட்டும் 30 ஆயிரமாக வாங்கிக்கொள்ளுங்கள், அதிகப்பட்சம் மூன்று மாத வாடகை தான் கேட்க வேண்டும் என்று சொன்னேன். அப்படியெல்லாம் இங்கு கிடையாது. முன் பணத்தை குறைக்க முடியாது என்று கறாராகச் சொல்லிவிட்டார்கள். கடைசியில் நானும் சரி என்று சொல்லிவிட்டேன். 


வீட்டில் ஃபேன் எதுவும் போடாமல் இருந்தது. அதனைப் போட்டு கொடுக்க கேட்டபோது, நீங்களே போட்டுக்கொள்ளுங்கள் போகும்போது கழட்டி கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார். எல்லா வசதியும் செய்து கொடுப்பது வீட்டு உரிமையாளர் பொறுப்பு அல்லவா? அதற்கும் சேர்த்துதானே வாடகை! என்று கேட்டதற்கு அந்த வழக்கமெல்லாம் இங்கு இல்லை! என்றார். இரண்டு படுக்கை அறைக்கும், இரண்டு ஃபேன் போட்டுக்கொண்டு அதற்குரிய பணத்தை முன் பணத்தில் கழித்து கொள்ளலாமா என்று கேட்டதற்கு 'அதெல்லாம் முடியாது வேண்டுமானால் வேறு வீடு பார்த்துக் கொள்ளுங்கள்!' என்று முகத்தில் அடித்தாற்போல் கூறிவிட்டார். அதற்காக இன்னொரு வீடு பார்த்து வீட்டுச் சாமான்களை மீண்டும் தூக்கிக் கொண்டு செல்ல முடியுமா? சரி என்று கூறி போனை வைத்து விட்டேன். பணமே குறியாக வாழ்பவர்கள். இவர்களுக்கு அதைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்று எண்ணிக்கொண்டேன்.


லாரிக்கு, வீட்டுச் சாமான்கள் ஏற்றி இறக்க கூலி ஆட்களுக்கு, வீட்டு உரிமையாளரிடம் வாடகைக்கு,  முன் பணத்திற்கு, ஃபேன் போடுவதற்கு எல்லாம் பேரம் பேசியதில் அதற்குமேல் எனக்கு பேரம் பேசுவதே அலுத்துப் போய்விட்டது. எதுவும் நம்ம இஷ்டத்துக்கு வரப்போவதில்லை! ஏன் அனாவசியமாக பேரம் பேசி மனச் சங்கடப்பட வேண்டும்! என்று தோன்றியது. 'கேட்பதைக் எடுத்துக் கொடுத்து விட்டு போக வேண்டியதுதான்! இருப்பதை செலவு செய்துவிட்டு சாக வேண்டியதுதான்!' என்று யாரோ சொன்ன வசனம் நினைவுக்கு வந்தது.


அதன்பிறகு ஃபேன் போடுவதற்கும், டிவி இணைப்பை பொருத்தி கொடுப்பதற்கும் எலக்ட்ரீசியனை வரச் சொன்னோம். ஒருவருக்கு இருவராக வந்தார்கள். டிவியைப் பொறுத்த ஏற்பாடு செய்தபோதுதான் தெரிந்தது. ரிமோட்டை காணவில்லை என்று. எல்லா மூட்டை முடிச்சு, பை, சூட்கேஸ் எல்லாம் தேடிப் பார்த்தாகிவிட்டது. கிடைக்கவே இல்லை. பிறகு அவர்களையே ரிமோட், ஃபேன் எல்லாம் வாங்கி வந்து போடச் சொன்னோம். அதெல்லாம் போய் வாங்கி வந்து பொருத்தி கொடுத்தார்கள். இருவருக்கும் ரூ. 1,200 வாங்கிக்கொண்டு சென்றார்கள். இதில் பேரம் எதுவும் நான் பேசவில்லை. இவர்கள் திறனுள்ள ஊழியர்கள். சுமார் ஒரு நாள் வேலை செய்தார்கள். ஆளுக்கு ரூ 600 தான் வாங்கிக் கொண்டார்கள். இவர்கள் கேட்ட ஊதியம் நியாயமானதாகவே தோன்றியது. அதேபோல் ஆரோ பொருத்தி கொடுக்க ஆள்  வரச்சொன்னோம். அவர்களும் ஒருவருக்கு இருவராக வந்தார்கள். பொறுப்புடன் வேலை செய்தார்கள். ரூ. 350 மட்டும் கேட்டுப் பெற்றுச் சென்றார்கள். திறன் உள்ள ஊழியர்கள் ஓரளவு நியாயமான ஊதியமே கேட்டு வாங்கிச் செல்கிறார்கள் எனவும், உடலுழைப்பு தொழிலாளர் மட்டும்தான் அடாவடித்தனமாக கூலி கேட்கிறார்கள் எனவும் தோன்றியது.

                     *******************

நாங்கள் தற்போது குடி போயுள்ள ஊரில் எங்களுக்கு பழைய சொந்தம் ஒன்று உள்ளது. ஐந்து பத்து வருடங்களாக போக்குவரத்து குறைந்துவிட்டது. எனது அப்பா வழி சொந்தம். மாமா முறை. மாமா இறந்து விட்டார். அத்தையும், மாமா மகன் குடும்பமும் உள்ளது. மாமாவிற்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி இறந்த பிறகு இரண்டாம் மனைவியை திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவிக்கு ஒரு மகள். இரண்டாம் மனைவிக்கு ஒரு மகன்.  ஒரு மகள். அவரின் மகன் மகள்களுக்கு எல்லாம் மாமா இருக்கின்ற போதே திருமணம் ஆகிவிட்டது. மாமாவின் மூத்த மனைவியின் மகள் சொத்து கேட்டு வழக்கு போட்டு விட்டார். அந்த வழக்கு சம்பந்தமாக முன்பு என்னிடம் ஆலோசனை கேட்டார்கள். மூத்த மனைவியின் மகளுக்கும் சொத்தில் பங்கு உள்ளது எனவும், திருமணச் செலவைக் காட்டி அவரின் சொத்துரிமையை மறுக்க முடியாது எனவும், சமாதானம் பேசி பணம் கொடுத்து சமரசம் செய்து கொள்ள முடியுமா என்று முயற்சித்து பாருங்கள் எனவும் நான் ஆலோசனை கூறினேன். மூத்த மகளுக்கு சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்று நான் கூறியதால் மாமா மகனுக்கு என்மீது வருத்தம்! அதிலிருந்து பேச்சுவார்த்தையும் போக்கு வரத்தும் குறைந்து விட்டது.


தற்போது நாங்கள் குடியிருக்கும் வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் அவர்களை பார்க்காமல் எப்படி இருக்க முடியும்? ஆதலால் அவர்களை சென்று பார்க்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஓய்வாகத்தானே இருக்கிறீர்கள்! கொஞ்சம் வயிற்றைக் குறைக்க வாக்கிங் போய் வரலாம் அல்லவா?  என்று எனது மனைவி நச்சரித்துக் கொண்டிருந்ததால், மாலை வாக்கிங் புறப்பட்டேன். அப்போது முதலில் நேராக அவர்கள் வீட்டிற்குச் சென்று பக்கத்தில் குடி வந்துள்ள விவரத்தைச் சொன்னேன். அவர்களும் பழசை மறந்து அன்போடு பேசினார்கள். 'சரி வீட்டுக்கு வாருங்கள்!' என்று சொல்லிவிட்டு எனது வாக்கிங்கை  தொடர்ந்தேன். 

                         ( பயணம் தொடரும்...)

-----------------------------------------------

Comments

Popular posts from this blog

6. பாட்டி எங்கள் குலதெய்வம்

இசை தரும் இனிய பாடல்கள் - 3

1. தொடுவானப் பறவைகள்