நாலு திசைக் கொலை 2
கூட்டத்தின் தலைவன்போல் இருந்த ஒரு நெடிய கருத்த மனிதன் டிரைவர் பக்கம் வர பின் தொடர்ந்தது கூட்டம். டிரைவர் ஜன்னல் வழியே தலையை வெளியே நீட்டினார்.
“எங்க ஊருலேயும் பஸ் நிறுத்தணும். நிப்பீங்களா இல்லையா? நிக்குமினு சொன்னாத்தான் பஸ்ஸை விடுவோம், என்ன சொல்றீங்க?”
பின்னால் இன்னொரு பஸ்ஸும் வந்து நின்றது. எதிர்பக்கம் இருந்தும் இன்னொரு பஸ்ஸும் வந்தது. அதுவும் நிறுத்தப்பட்டது.
“இப்படி எல்லா ஊர்காரர்களும் கேட்டா நாங்க எப்படி பஸ்ஸை டைம்முக்குள்ளே எடுக்க முடியும். அதுக்கெல்லாம் டவுண் பஸ் இருக்குங்க. எங்களை தொந்தரவு பண்ணாதீங்க" என்று ஒரு பஸ் டிரைவர் தைரியமாக பேசினார்.
“அதெல்லாம் முடியாது. எங்க ஊருலே பஸ்ஸு நின்னே ஆகணும்.. இல்லைன்னா விட மாட்டோம். எல்லாம் ரோட்டிலே அப்படியே உட்காருங்க, பாத்துக்கலாம்..”
தலைவரின் ஆணைக்கு கட்டுப்பட்டு தொண்டர்கள் ரோட்டில் கோஷம் போட்டபடியே அமர்ந்தனர். பயணிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை கூறிக்கொண்டு நிலைமையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அருண் இரண்டு தரப்பு கருத்திலும் நியாயம் இருக்கிறது. ஏதோ ஒரு வழியில் சமரசம் காண வேண்டும் என்று எண்ணினான்.
பஸ்ஸில் இன்ஸ்பெக்டர் உட்பட பல பெரிய மனிதர்கள் இருந்தும் ஏதும் செய்து சமரசப்படுத்தி பஸ்கள் போக வழி செய்ய முடியாமல் விழித்துக் கொண்டிருந்தனர்.
ஒரு மணி நேரத்திற்கு பின்னர் எப்படியோ தகவல் கிடைத்து போக்குவரத்து அதிகாரி, கோட்டாட்சி தலைவர், டிஎஸ்பி போன்றவர்களெல்லாம் வந்து சேர்ந்தனர். அந்த ஊர் பிரமுகர்களுடன் பஸ்களை விடுங்கள். பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு பெறலாம் என்று கேட்டுக்கொண்டதின்பேரில் பஸ்கள் விடப்பட்டன.
ஊர் போய் சேருவதற்குள் இதென்ன பிரச்சனை மேல் பிரச்சனை வருகின்றன என்று எண்ணியவனாய் தனது இடத்தில் போய் அமர்ந்தான். பஸ் கிளம்பி வேகம் பெற்றது.
இன்னும் சில நிமிடங்களில் பஸ் அவன் கிராமத்தை அடைய போகிறது என்று எண்ணியபோது, அவனுக்கு தான் இன்று ஊருக்கு போவதற்கான காரணம் நினைவில் எழுந்தது.
'இன்று ஊருக்கு போவதற்கு காரணம் கவிதா. அவள்தான்' என்று எண்ணியபோது அவன் உதடுகள் 'கவிதா! என் இனிய கவிதா' என்று பலமுறை முணுமுணுத்தன.
அவளை சந்தித்த நாள் அவள் நினைவில் எழுந்தது. பி.காம் படித்து விட்டு இரண்டு வருடம் வேலையில்லாமல் இருந்து எம்.எல்.ஏ-வின் சிபாரிசின் மூலம் ஒரு வழியாக ஒரு தனியார் நிறுவனத்தில் கிளார்க்காக அன்று சேர்ந்திருந்தான். அவனை சுற்றிலும் புதுமுகங்கள். ஒரு சிலர் அவனிடம் தானாக வந்து அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். அவனாக யாரிடமும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளாமல் தனக்கு காட்டப்பட்ட இடத்திலேயே உட்கார்ந்து கொண்டு மேஜை மீதிருந்த பைல்களை புரியாமல் புரட்டிக் கொண்டிருந்தான். இயல்பிலேயே அவன் ஒரு ரிசர்வ் டைப். புதியவர்களுடன் பழகுவதில் தயக்கமுடையவன். ஆனால், பழகி விட்டால் ஒரே கொட்டந்தான்.
அவன் அப்படி அமைதியாக உட்கார்ந்திருந்தபோதுதான் எதிரில் வந்து நின்றாள் அந்த கவிதா.
“ஹலோ! ஐ ஏம் கவிதா! கிளேடு டு மீட் யூ". என்று கையை நீட்டினாள்.
திடீர் குரலையும், கையை நீட்டிக் கொண்டிருப்பதையும் கண்டவுடன் அவக்கு தூக்கிப்போட்டது. 'பெண்கள் இவ்வளவு சாதாரணமாக கை குலுக்க கை நீட்டுவார்களா? அவளுக்கு கை கொடுத்து குலுக்கலாமா? என்ற கேள்வியுடன் அவளை பார்த்து தடுமாற்றத்துடன் "ஹலோ" சொல்லி கை கொடுத்தான்.
“ஐ ஏம் அருண்! கிளேடு டு மீட் யூ"
இருவரும் லேசாக கை குலுக்கியவுடன் புன்னகைத்தபடியே கைகளை விடுவித்துக்கொண்டனர்.
“நான் இங்க டைப்பிஸ்டா இருக்கேன். மற்ற விபரங்களையெல்லாம் இலஞ்சில் பேசிக்கலாம். வர்றேன்" என்று நகர்ந்தாள்.
இது சகஜமாக நடக்கக்கூடியதுதான் என்பது போல் பார்த்துக் கொண்டிருந்த அக்கம்பக்கத்து சீட்டுக்காரர்கள் அவன் பிரமித்து போய் உட்கார்ந்து இருப்பதைக் கண்டு புன்னகைத்துக் கொண்டார்கள்.
இப்படி திகைப்போடு ஆரம்பித்த கவிதாவின் உறவு நாளுக்கு நாள் வளர்ந்தது. அவள் சகஜமாக பேசினாள். பழகினாள். அவனும் நாளடைவில் அவளைப்போல் சகஜமாக பேசி பழகினான். அவள் அவனோடு மட்டுமல்ல. எல்லோரிடமும் அப்படித்தான் பழகினாள். ஆனால், அருணைப் பொறுத்தவரையில் இந்தளவிற்கு பேசி பழகியது அவளிடந்தான். அவன் அவளை மானசீகமாக காதலித்துக் கொண்டிருந்தான். அவளிடம் எவ்வளவோ விசயங்களை சகஜமாக பேசிக் கொண்டிருந்தாலும், தன் மனதில் உள்ள காதல் விசயத்தை மட்டும் அவளிடம் பேச இயலாமல் தவித்தான். எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒரு வழியாக சொல்லியபோது அவள் பெரிதாய் சிரித்தாள்.
“நான் முன்னரே நினைச்சேன். இப்படி ஒரு நாள் சொல்லுவீங்கனு. ஆனா அருண் நான் இன்னும் இதைப்பற்றி யோசித்துப் பார்க்கவில்லை. ஒரு இரண்டு நாள் டைம் கொடுங்க...யோசித்து பாத்து முடிவு சொல்றேன்.. என்ன?” என்று சென்றாள்.
சொன்னபடியே இரண்டு நாள் கழித்து அவள் முடிவு சொன்னாள்.
“அருண்! உங்க குணம், நடத்தை, அழகு, அறிவு, அன்பு, பொருளாதாரம் போன்ற விசயத்திலெல்லாம் ஓ.கே. நம்ம சாதி கூட வேற, வேறதான். அது கூட எனக்கு பிரச்சனை இல்லை. எனக்கு அம்மா இல்ல. அப்பாதான் . அம்மா இல்லாததாலே அப்பா ரொம்பவும் செல்லமா வளர்த்தார். என் அப்பா பள்ளிக்கூட ஆசிரியர். உலகம் புரிஞ்சவர். என் விருப்பத்துக்கு எவ்வித தடையும் போட மாட்டார். நான் தப்பு செய்ய மாட்டேன். தவறான வழியில் போகமாட்டேன்னு அவருக்கு என் மேல நிறைய நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கைக்கு நான் எப்பவும் குந்தகம் விளைவிக்கலே. உங்களை எனக்கு பிடிச்சிருக்கு. உங்களை நான் காதலிக்க தயார். ஆனா, நாம வாழ்க்கையில சேர வேணும். வாழ்க்கை நடத்தணும். அது முடியக்கூடிய ஒன்னுன்ணு தோணிச்சின்னா காதலிக்கலாம். இல்லையுன்னா நாம எப்பவும் நண்பர்களா இருந்துக்கலாம்.”
“கவிதா! நானும் ஏதோ விளையாட்டா காதலிக்கிறேனு சொல்லல்லே. வாழ்க்கையிலே ஒன்னு சேரணுமுனுதான் விரும்பறேன்".
“உங்க வீட்டுலே இதற்கு சம்மதிப்பார்களா?” சற்று யோசித்தான் மௌனமாக.
“கவிதா! எனக்கு வீட்டுலே இருப்பது தாய் மட்டும்தான். எனக்கும் சாதி ஒரு பிரச்சனை இல்லை. என் தாயை சம்மதிக்க வைக்க இயலுமுனு நம்பறேன்.”
“உங்க நம்பிக்கை வெற்றிபெற வாழ்த்துக்கள் அருண். இப்பவே நாம இருவரும் காதலிப்பதா நினைச்சுக்கிங்க. ஆனா முதல்லே உங்க வீட்லே உங்கள் தாய்கிட்ட சம்மதம் தெரிஞ்சு வாங்க. சம்மதம் கிடைச்சா காதலிக்கலாம். இல்லையுனா இப்படியே நண்பர்களாய்....”
“ஓ.கே. கவிதா! நான் இப்பவே வீட்டுக்கு புறப்படுறேன். சம்மதத்தோடு வர்றேன். நிச்சயமா கவிதா!.”
"குட் லக்!”
இப்படி புறப்பட்டு வீட்டுக்கு பஸ் ஏறி வந்தவன்தான் அருண்.
பஸ் அவன் ஊரை அடைந்தது.
இறங்கினான். வீட்டை நோக்கி தெருவில் நடந்தான்.
வீட்டை நெருங்கும்போது திடுக்கிட்டான். வீட்டின்முன் நிறையபேர் கூட்டமாக நின்றிருந்தனர்.
“வீட்டில் யாருக்கு என்ன? அம்மாவுக்கு உடம்புக்கு சரியில்லையா?
துரிதமாக நடைபோட்டு வீட்டை அடைந்தபோது அவன் தாய் ஓடி வந்து கட்டிக்கொண்டு கதறினாள். அவன் என்னவென்று புரியாமல் விழித்தான்.
(தொடரும்....)
*****
Comments
Post a Comment