2. விடை தேடும் வினா

 




அப்போதுதான் வீட்டுச் சாமான்கள் இறக்கப்பட்டதால் காலை டிபன் வீட்டில் தயார் செய்ய இயலவில்லை. ஆதலால் காலை டிஃபன் வாங்கிவர கடைக்குச் சென்றேன். கடையில் பத்து தோசை 15 இட்லி பார்சல் என்று சொல்லிவிட்டு வெளியில் போட்டிருந்த ஒரு சேரில் அமர்ந்தேன். உள்ள கடைகளில் வேலை செய்யும் ஆட்களை பார்த்தேன். 8 பேர் அதில் வேலை செய்தார்கள். அதில் நான்கு பேர் பீகார்காரர்களாக இருந்தார்கள். குறிப்பாக சர்வர் பணிகளில் தூய்மைப் பணிகளில் பீகார்காரர்கள் இருந்தார்கள். பீகார் சர்வர்கள் என்னென்ன வேணும் என்று வாடிக்கையாளர்களிடம் அன்பாக விசாரித்து சர்வு செய்து கொண்டு இருந்தார்கள். எனது சேருக்கு பக்கத்தில் இன்னொருவர் காபி குடித்துக்கொண்டு அமர்ந்தார். என்ன இங்கு அதிகமாக பீகார்காரர்கள் வேலை செய்கிறார் என்று அவரிடம் கேட்டேன். தமிழ்நாட்டு ஆட்கள்  கேக்குற சம்பளத்தில் பாதி சம்பளம் கொடுத்தால் போதும். இவர்கள் வேலை செய்ய வருகிறார்கள். நம்ம படித்த பையன்கள் எல்லாம் இதுபோன்ற வேலைகள் செய்வதை கேவலமாக நினைக்கிறார்கள். கடைக்காரர்கள் என்ன செய்வார்கள்? இவர்களுக்கு வேலை கொடுக்கிறார்கள். பாதி சம்பளத்திற்கு ஆள் கிடைத்தால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள்? என்று கூறினார் அவர். அப்போது எனது பார்சல் தயாராகி விட்டதாக கடைக்காரர் அழைக்கவும், நான் போய் வாங்கி கொண்டு வீட்டுக்கு கிளம்பினேன்.


காலை டிபன் முடித்து அடுத்து  என்னென்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தபோது நண்பர் ஆனந்தன் இடமிருந்து போன் வந்தது. நான் சிவகங்கையில் இருந்து புறப்பட்ட போது என்னை வழியனுப்ப வந்த ஒரே ஒரு நண்பர். பணி ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். எப்போதும் மற்றவர்களுக்கு உதவி கொண்டே இருக்க வேண்டும் என்று எண்ணுபவர். ஆதலால் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவர். 


'நாமக்கல் போய் சேர்ந்து விட்டீர்களா?' என்று விசாரித்தார். 'நல்லபடியாக வந்தாகிவிட்டது.' என்றேன். ஒரு நண்பர் சட்ட ஆலோசனை வேண்டுமென்றார். 'உங்களுக்கு அறிமுகப்படுத்தவா? இப்போது சட்ட ஆலோசனை வழங்க இயலுமா?' என்று கேட்டார். 'அழையுங்கள்!  எனக்குத் தெரிந்த அளவுக்கு சொல்லுகிறேன்'  என்றேன். என்னை ஹோல்ட் செய்துவிட்டு அவரை அழைத்தார். அவர் இணைப்புக்கு வந்தார். ஆனந்தன் அறிமுகப்படுத்தினார். நான் வணக்கம் என்றேன். அவர் பதில் வணக்கம் சொன்னார். 'சொல்லுங்கள் என்ன பிரச்சனை?' என்று கேட்டேன். 


எனது அப்பா வியாபாரம் செய்தார். இரண்டு மளிகைக்கடை வைத்திருந்தார். நல்ல வசதியாக இருந்தார். ஒரு பூர்வீக வீட்டை அவரது நண்பருக்கு சுமார் 40 வருடங்களுக்கு முன்பு வாடகைக்கு விட்டார். அவர் வாடகை ஒழுங்காக கொடுத்ததில்லை. எப்போதாவது கொஞ்சம் கொஞ்சம் கொடுப்பார். எனது அப்பாவும் அதனைப் பெரிதாக நினைத்துத் கொள்ளவில்லை. வாடகைக்கு  விட்டதற்கு, வாடகை கொடுத்ததற்கு ஆவணம் எதுவும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதன் பிறகு அப்பா இறந்துவிட்டார். அவரது நண்பரும் இறந்துவிட்டார். தற்போது அவர்  பையன்கள் உள்ளார்கள். அக்கம் பக்கத்தில் ஒன்றிற்கு இரண்டாக டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் வந்ததாலும், அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் கடைகள் வந்ததாலும்,  எங்கள் வியாபாரம் நொடித்து சொத்துக்களும் சேதாரம் ஆகி விட்டன. ஆனால் எனது அப்பாவின் நண்பர்களின் பையன்கள் ரியல் எஸ்டேட், பில்டிங் கான்ட்ராக்ட் என்று பல வேலைகள் செய்து வசதி ஆகிவிட்டார்கள். எனது பையனுக்கு தற்போது அந்த வீடு தேவையாக உள்ளது. வீட்டை காலி செய்து கொடுக்க கேட்டதற்கு ஒரு மாதத்தில் தந்து விடுவதாகச் சொன்னார்கள். ஆனால் அதன் பிறகு ஒரு வாரத்தில் அந்த வீட்டின் திண்ணை பகுதிகளை இடித்து விட்டு முன்பகுதியில் ஒரு வீடு கட்ட கடகால் போட ஏற்பாடு செய்தார்கள். வீட்டை காலி செய்து கொடுப்பதாக சொல்லி விட்டு தற்போது புது வீடு கட்ட ஏற்பாடு செய்கிறீர்களே! இது நியாயம் தானா  என்று நான் போய் கேட்டேன். வீட்டுக்கு பட்டா வரி ரசீது எல்லாம் எங்கள் பெயரில் உள்ளது. இந்த சொத்து எங்கள் சொத்து. நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்! பார்த்துக் கொள்ளலாம் என்று கூச்சல் செய்கிறார்கள். எனது அப்பா வாடகைக்குத்தானே உங்களுக்கு கொடுத்தார்! இப்படி செய்யலாமா என்று கேட்டேன். எங்கே வாடகை பத்திரம், வாடகை ரசீது எடுத்து வா பார்க்கலாம்! வாடகைக்கு விட்டவரை கூட்டி வா பார்க்கலாம் என்று சவால் விடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஒரு வாரத்தில் ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள். இதற்கு என்ன செய்ய?  என்று கேட்டார். 


உங்கள் அப்பா அவர்களுக்கு சொத்தை எழுதி வைத்துள்ளாரா? கையெழுத்து ஏதேனும் போட்டுக் கொடுத்துள்ளாரா? என்று நான் கேட்டேன். 'அப்படியெல்லாம் உள்ளதாக எதுவும் தெரியவில்லை' என்றார். சரி! நீங்கள் அந்த வக்கீல் நோட்டீசை அனுப்பி வையுங்கள்! படித்துப் பார்த்து விட்டு சொல்லுகிறேன் என்று கூறினேன். அவர் சற்று நேரத்தில் வாட்ஸ் அப்பில் அந்த நோட்டீசை அனுப்பி வைத்தார்.நான் அதனைப் படித்துப் பார்த்தேன்.


அதில் வீட்டை அவர்கள் 40 வருடங்களாக அனுபவித்து வருவதாகவும், பட்டா பெற்றுள்ளதாகவும், வீட்டு வரி கட்டி வருவதாகவும், வீடு தங்களுக்கு சொந்தம் எனவும், வீடு பழுதடைந்து விட்டதால் புதுப்பிக்க ஏற்பாடு செய்து வருவதாகவும், எதிர் மனுதாரர்கள் அனாவசியமாக வந்து தடுப்பதாகவும், மேற்கொண்டு தடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்கு எதிர்மனுதாரர்களே பொறுப்பு எனவும் கண்டிருந்தது. 


அதனைப் படித்துப் பார்த்துவிட்டு நான் மீண்டும் ஆனந்தனின்  நண்பருக்கு போன் செய்தேன். அவரிடம் வக்கீல் நோட்டீஸில் உள்ள விவரங்களைச் சொன்னேன். உங்கள் அப்பா சொத்து எதனையும் அவர்களுக்கு எழுதி வைத்ததாக அவர்கள் எதுவும் சொல்ல வில்லை எனவும்,  வீட்டை 40 வருட அனுபவ பாத்தியத்தில் அவர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள் எனவும், அதற்கு ஆதரவாக பட்டா, வீட்டு வரி ரசீது உள்ளதாக கூறி உள்ளார்கள் எனவும், சொந்த சொத்தாக ஒருவர் ஒரு சொத்தை 12 வருடங்களுக்கு மேல் அனுபவித்து விட்டால் அதில் அவருக்கு அனுபவ பாத்தியம் ஏற்பட்டு விடுகிறது எனவும், நீங்கள் உங்கள் சொத்து என்பதை நிலைநாட்ட வேண்டும் என்றால் அது உங்களுடைய சொத்து என்பதற்கு உள்ள உரிமை ஆவணத்தை காட்டினால் மட்டும் போதாது எனவும், அதனை அவர்களுக்கு வாடகைக்கு தான் உங்கள் அப்பா விட்டிருந்தார் என்பதையும் நிரூபிக்க வேண்டும் எனவும், வாடகை பத்திரம்,  வாடகை ரசீது நகல் போன்றன இல்லாத நிலையில் அதை நிரூபிப்பது கடினம் எனவும், வாய்மொழி சாட்சியங்களை வழங்கலாம்  என்றாலும், வாய்மொழி சாட்சிகள் உண்மையும் சொல்வார்கள் பொய்யும் சொல்வார்கள் என்பதால் ஆவண சாட்சியத்திற்கே நீதிமன்றம் முக்கியத்துவம் கொடுக்கும் எனவும், வாடகை கொடுப்பதாக எழுதிய கடிதம் போன்ற ஆவணங்கள் ஏதேனும் இருந்தால் உதவியாக இருக்கும் எனவும் கூறினேன். 


அப்படி எல்லாம் எதுவும் இல்லை! ஆனால் வீட்டை காலி செய்து கொடுக்க முதலில் போய்க் கேட்டபோது ஒரு மாதத்தில் காலி செய்து கொடுத்து விடுவதாக அவர்கள் சொன்னதை செல்போனில் பதிவு செய்திருப்பதாகவும், அது போதுமா எனவும் கேட்டார். அது உங்களுக்கு பயன்படும்! அதனை பத்திரமாக பாதுகாத்து வையுங்கள்! மற்றவர்களுக்கு அதனை கொடுப்பதாக, அனுப்புவதாக இருந்தால் அதன் நகலை மட்டும் அனுப்புங்கள். முதலில் வீட்டை வாடகைக்கு விட்டு விவரத்தை கூறி பதில் அறிவிப்பு கொடுங்கள்! வீடு உங்களுக்கே சொந்தமானது என்பதை அறிவிப்பு செய்யவும், வீட்டை உங்களிடம் ஒப்படைக்கவும் பரிகாரம் கோரி நீங்கள் நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யுங்கள்! நீங்கள் பதிவு செய்துள்ள ஆடியோவை டப்பிங் என்று சொல்ல வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் அது உண்மையானது என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கலாம் என்று சொன்னேன். அது ஆடியோ பதிவு அல்ல வீடியோ பதிவு என்று அவர் சொன்னார். வீடியோ பதிவு என்றால் எடிட்டிங் செய்யப்பட்டுள்ளதாக கூற வாய்ப்பு உள்ளது. இருப்பினும் அதனையும் அறிவியல்பூர்வமாக உண்மையானது என நிரூபிக்கலாம் என்று கூறினேன். அவர் நன்றி கூறி போனை வைத்தார். 


மனிதர்கள் ஏன் இப்படி மாறுகிறார்கள்? கஷ்ட காலத்தில் உதவி செய்பவர்களுக்கு நன்றி மறந்து ஏன் கஷ்டம் கொடுக்கிறார்கள்! பிறர் சொத்தை அபகரித்துக் கொள்ளும் எண்ணம் ஏன் இவர்களுக்கு ஏற்படுகிறது? உதவி செய்பவர்களுக்கு பதிலுக்கு உதவி செய்ய இவர்கள் ஏன் மறந்து விடுகிறார்கள்? பணம் சொத்து மட்டுமே வாழ்க்கை என்று மனிதநேயத்தை மறந்து விடுகிறார்கள்! அன்பைத் துறந்து விடுகிறார்கள்! அறம் அல்லாடுகிறது. நியாயம் நிலை தடுமாறுகிறது! இதுதான் பண  வேட்டை சமுதாயம் கொடுக்கும் பரிசாக உள்ளது! இனி இவர்கள் இருவருக்கும் இடையே சண்டை சச்சரவு வம்பு வழக்கு காவல்நிலையம் நீதிமன்றம் என்று பணமும் மனமும் விரையமாகும்! இது இருவருக்குமே கஷ்ட நஷ்டம் தான்! நன்றி உணர்வோடு மனிதத் தன்மையோடு வீட்டை காலி செய்து கொடுத்துவிட்டு சென்றிருந்தால் அன்பும் நட்பும் நிலைத்து நின்று இருக்கும். நல்ல குணத்தை இழக்கச் செய்து பணத்தை மட்டுமே போற்றும் பண வேட்டை சமுதாயம் மன மாற்றம் காணச் செய்ய என்னதான் வழி என்பதுதான்  நல்லவர்கள் உள்ளத்தில் என்றும் விடை தேடும் வினாவாக குத்திக் கொண்டு இருக்கிறது.

                           (பயணம் தொடரும்...)

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Comments

Popular posts from this blog

6. பாட்டி எங்கள் குலதெய்வம்

இசை தரும் இனிய பாடல்கள் - 3

1. தொடுவானப் பறவைகள்