நாலு திசைக் கொலை 1
நாலு திசைக் கொலை
1
அப்போதுதான் புறப்பட்டு பஸ்டேண்டிலிருந்து மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த பஸ்சில் வலக்கையில் ஒரு சிறிய சூட்கேஸுடன் இடக்கையால் கம்பியைப் பிடித்து தொத்தி படிக்கட்டில் ஏறினான் அருண். தனக்கென்று ஓர் இடத்தை அங்கு அவர் தேடி பார்த்தபோது அநேகமாக அந்த பஸ் நிறைந்திருந்தது. ஆனால் இரண்டு பேர் அமரும் ஒரு சீட்டில் ஓர் இரட்டை சரீர தொப்பை மனிதன் அமர்ந்திருந்தான்.
“ஸார் கொஞ்சம் நகறீங்களா? உட்கார்ந்துக்கறேன்".
என்ன பார்த்து எவண்டா நகரச்சொல்றவன் என்று கேட்பதுபோல் அந்த தொப்பையன் அவனை எரிப்பது போல் அதிகார தோரணையுடன் பார்த்தான்.
“என்ன ஸார் மொறைக்கிறீங்க.. இரண்டு ஸீட்டையும் அடைச்சிகிட்டு உட்கார்ந்திருக்கீங்க.. ஒரு இடங்கொடுத்தா என்ன கொறைஞ்சா போயிடுவீங்க.. கொடுங்க ஸார். என்னமோ இரண்டு ஸீட்டு வாங்கிட்ட மாதிரி...”
என்ன இவன் யாருன்னு நெனைச்சான்..எங்கிட்ட மோதறளவிற்கு ஒருத்தன் வந்துட்டானா.. இவனை பந்தாடணும் என்ற எண்ணம் மனதில் எழ அந்த தொப்பையன் கண்ணில் ஆத்திரமும், ஆவேசமும் மிதந்தன.
“அதற்குள், கண்டக்டர் 'தம்பி, முன்னாடி வா இடம் இருக்கு' என்று அழைத்துக் கொண்டே அருணை நோக்கி வந்தார். அருகில் வந்து "அவர் போலீஸ் இன்ஸ்பெக்டர், எதுக்கு வம்பு? போ முன்னாலே" என்றார் மெதுவாக.
ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டருடன் மோதி விட்டோம் என்பதில் அவன் துணுக்குற்றாலும் தனக்கும் இடம் தர ஓர் ஆள் மறுத்து விட்டானே என்பதில் ஏற்பட்ட எரிச்சல் அடங்கிவிடவில்லை.
“ரண்டு டிக்கெட்டு எடுத்திட்டானோன்னு நெனைச்சேன். டிக்கெட்டே எடுக்காத ஆளா! அதான்....” என்று பேசியவாறே முன்னால் நகர்ந்தான்.
தொப்பையன் கோபத்தின் எல்லைக்கே போய் விட்டான். பற்களை நறநறவென்று கடித்தபடி எழுந்தான்.
“அடேய் …......பயா! …..........பயா! உன்னை...” என்று வேகமாக பாய்ந்து வந்தான். அவன் அருணை பிடிப்பதற்கு முன் அவன் முகத்தில் ஓங்கி ஒருத்தன் குத்து விட்டான். அந்தக்குத்தில் தொப்பையன் ஒரு பெண்மணி மீது போய் விழுந்தான். அவள் அவனை இடித்து தள்ளினாள். அந்த தள்ளலில் கம்பியின் மீது போய் மோதினான். எதிர்பாராத தாக்குதலில் தொப்பையன் நிலைகுலைந்து போனாலும் புயல் போல் சீறிக்கொண்டு எழுந்து, தன்னைக்குத்தியவன் மீது பாய்ந்து குத்து விட்டான்.
உறுதியான உடற்கட்டுடன் இருந்த குத்துவிட்ட மீசைக்காரன் குத்துக்கு பதில் குத்து மூக்கை பார்த்து விட இரத்தம் கொட்டியது. தொப்பையனின் வெள்ளை சட்டையில் சிவப்பு கோலங்கள் உருவாகின. கண்டக்டரும் பல பயணிகளும் இருவரையும் விலக்கி அவரவர் இடத்தில் உட்கார வைத்தனர். இருவரும் கேட்கத்தகாத வார்த்தைகளில் பயங்கரமாக திட்டிக் கொண்டனர்.
“எதுக்கடா சாதியை இழுக்கிறே....சாதியை சொல்லி திட்டுனே! நார்நாரா கிழிச்சிடுவேன், நீ போலீஸினா எல்லாரும் பயந்து நடுங்கணுமா, நானும் பட்டாளத்தானாக்கும்...வாடா.. நீயா, நானா ஒரு கை பார்த்துக்கலாம்....பன்னிப்பயலே!”
“திருட்டு நாயே! என் மேலேயே கைய வெச்சிட்டே.. என்னை யாருன்னு உனக்கு காட்டறண்டா!”
இப்படியாக இருவரும் காரசாரமாக திட்டிக் கொண்டிருக்க, பஸ் வேகம் பிடித்து ஓடிக்கொண்டிருந்தது. மெல்ல மெல்ல திட்டல்கள் ஓய, பயணிகள் பலர் மெதுவாக கண்களை மூடத் துவங்கினர். அருண் சன்னலின் வழியே வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தான். அவனின் கிராமம் வருவதற்கு இன்னும் அரைமணி நேரத்திற்கு மேலாகும் என்று நினைத்துக் கொண்டான். அவனுக்கும் இமைகள் தூக்கத்தின் பிடியில் சரிந்து சரிந்து விரிந்து கொண்டிருந்தன. சில நிமிட போராட்டத்திற்கு பின் அவன் இமைகள் நித்திரையில் சரணடைந்தன.
அந்த நித்திரையினூடே ஒரு தேவைதை மிதந்து வந்தாள். அவள் அவனை அள்ளிக்கொண்டு வான வெளியில் பறந்தாள். அவன் உடலிலும் சிறகுகள் முளைத்தன. அவனும் அவளுடன் பறந்தான். அப்போது ஒரு கரும்மேகம் பாறையைப்போல் உருண்டு வந்து அவர்கள் மீது மோதியது.
திடீரென்று பெரியதாக பஸ் பிரேக் போட்டு நின்றதில் அருணின் நெற்றி முன்னால் இருந்த கம்பியில் நறுக்கென்று மோதி வலித்தது.
பஸ்ஸுக்கு முன்னால் பலபேர் தடி, அரிவாள், கற்களுடன் நின்றிருந்தனர். டிரைவர் வெலவெலத்து போனார். அருணின் உள்ளம் திக்திக்கென்று அடித்துக் கொண்டது.
(தொடரும்...)
*****
Comments
Post a Comment