1. அதிர்ச்சி அளித்த கூலி
காலை 6:30 மணி:
எங்கள் வீட்டிற்கு தினமும் 2 செய்தித்தாள் வரும்! ஒன்று எனக்கு. மற்றொன்று எனது மகனுக்கு. ஒன்று தமிழ். மற்றொன்று ஆங்கிலம். தமிழ் செய்தித்தாள் எனக்கு. ஆங்கில செய்தித்தாள் எனது மகனுக்கு. எனக்கு ஆங்கிலம் எழுதப்படிக்கத் தெரியும் என்றாலும் பேசுவதோ, படிப்பதோ சிறிதும் விருப்பம் இல்லாதது!
நான் வீட்டுக்குள் இந்து தமிழ் திசையை படித்துக் கொண்டிருந்தேன். எனது மகன் தி இந்து ஆங்கில செய்தித்தாளை வெளியில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தான்.
"அப்பா! ஒரு இரட்டைக் கொலை வழக்கில் 3 ஆயுள் தண்டனை வழங்கிய தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தி இருக்கு. அது உங்களுடையதாப்பா!" என்று தி ஹிந்து செய்தித்தாள் செய்தியைக் கொண்டு வந்து என்னிடம் காட்டினான். நான் அதை வாங்கிப் படித்துப் பார்த்தேன்.
"ஆமாம்! நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பைத் தான் உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தி இருக்கிறது." என்றேன்.
எனது மகனின் முகத்தில் பெருமை கலந்த மகிழ்ச்சி தென்பட்டது. அந்த செய்தியை அவன் அம்மாவிடமும் கொண்டு போய் காட்டினான். அவளுக்கும் மகிழ்ச்சி புன்னகையாக வெளிப்பட்டது. எனக்கும் சற்று மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.
************
மாலை 6.30 மணி:
பணி ஓய்வு பெற்ற எனக்கு வழி அனுப்புதல் நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. நானும் எனது மனைவியும் சென்றிருந்தோம். எல்லோரும் அன்பானவர், பண்பானவர், தன்மையானவர், உண்மையானவர் என பாராட்டி பேசினார்கள். அவர்கள் கூறியதை எல்லாம் கேட்டபோது எனக்கு இவ்வளவு சிறப்பம்சங்கள் உள்ளதா என்று எனக்கே வியப்பாக இருந்தது. அவர்கள் கூற்றில் மிகைப்படுத்தல் இருந்தது என்ற போதிலும், ஓரளவு உண்மையும் இருந்தது. பதிலுக்கு நானும் அவர்களின் சிறப்பம்சங்களை கூறி நன்றி தெரிவித்தேன். மேலும் வறிய வழக்கறிஞராக இருந்த என்னை திருமணம் செய்து கொள்வதற்கு பெண் கிடைக்காமல் இருந்த நிலையில், என்னை விரும்பிய எனது மனைவியைக் கரம்பிடித்ததால் எனது வாழ்வு ஒளிமயமானதாக கூறினேன். மூத்த மகன் பிறந்த போது அவர்களுக்கு நல்வாழ்வு வழங்க வேண்டுமே என உளம் உருக எண்ணிய எண்ணமே இந்த வேலை கிடைக்க காரணமாக இருந்ததாக எண்ணுவதாக கூறி, எனது இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு பெற்று மாறாத அன்புடன் எப்போதும் என்னுடன் இருந்து வரும் எனது மனைவிக்கு நன்றி தெரிவிக்கும் இடமாக அதனை நான் பயன்படுத்திக்கொண்டேன்.
பதிலுக்கு எனது மனைவியும் வழக்கு கட்டுகளை தினமும் வீட்டுக்கு எடுத்து வந்து படித்து தனது பணியிலேயே குறியாக இருந்த எனது கணவருக்கு மனச் சங்கடம் எதுவும் ஏற்படுத்தாமல் தனது ஆசைகளை விருப்பங்களை கட்டுப்படுத்திக்கொண்டு வாழ்ந்து வந்ததாக அவர் தெரிவித்தார். எல்லோரும் வாழ்த்தி விடை கொடுத்து அனுப்பினார்கள்.
*****************
ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு பணி மாறுதல் பெற்று நீதிபதிகள் செல்லும்போது அந்த நீதிமன்றத்தில் பணிபுரியும் கட்டளை சார்வாளர்கள் மற்றும் கட்டளை நிறைவேற்றாளர்கள் வந்து வீட்டு சாமான்களை லாரியில் ஏற்றிகொடுத்துவிட்டு செல்வார்கள். அவ்வாறு வந்து உதவி செய்ய கேட்டபோது ஒரே ஒருவர் மட்டும் வருவதாக கூறியுள்ளார் எனவும், மற்றவர்கள் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையில் வருவதற்கு இல்லை எனச் சொல்லி விட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. என்னிடம் பணிபுரிந்த ஒரு அலுவலக உதவியாளர், வருவதாகச் சொல்லியுள்ள கட்டளை சார்வாளர் ஆக இருவர் மட்டும் வீட்டுச் சாமான்களை லாரியில் ஏற்ற போதாது என்பதால் மேலும் 4 நபர்களை வெளியிலிருந்து கொண்டு வர வேண்டியதாகிவிட்டது. கூறி ஆட்களை ஏற்பாடு செய்ய இரண்டு மூன்று நண்பர்களிடம் சொன்னேன்.
ஒரு மணி நேரத்தில் ஏற்றிவிட்டு செல்லக்கூடிய வேலைக்கு தலைக்கு ரு. 500 கேட்பதாக ஒவ்வொருவரிடம் இருந்தும் தகவல் வந்தது. நால்வருக்கும் மொத்தமாக ரூ 500 கொடுத்தால் போதும் என்று எண்ணியிருந்த எனக்கு அந்த செய்தி அதிர்ச்சியாக இருந்தது. இருபது வருட பணிக்காலத்தில் ஒரு போதும் கூலி கொடுத்து வீட்டுச் சாமான்களை ஏற்றி செல்லவில்லை. பணி ஓய்வு ஆன பிறகு அவ்வாறான நிலை. முன்பு வீட்டுச் சாமான்களை ஏற்றி விடும் நீதிமன்ற ஊழியர்களுக்கு டீ செலவு அல்லது மதிய உணவு செலவுக்கு காசு கொடுத்து விட்டுச் செல்வது வழக்கம். ஆதலால் கூலியாட்கள் எவ்வளவு கேட்பார்கள் என்று தெரியாமல் போய்விட்டது.
சுமார் 20 வருடங்களுக்கு முன்பு ஒருவருக்கு நாள் கூலி அதிகப்பட்சம் 100 ரூபாய் கொடுப்பார்கள். விபத்து நஷ்டஈடு வழக்குகளில் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கூலி வேலைக்கு ஊதியம் கணக்கிடும்போது சிறப்பு திறனுள்ள வேலைக்கே ஒருவருக்கு நாள் கூலி அதிகபட்சம் ரூ 200 தான் கணக்கிட்டதாக ஞாபகம். தற்போது ஒரு மணி நேர வேலைக்கே தலைக்கு ரூ 500 கேட்பது உண்மையிலேயே எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. நீதிமன்றத்திலிருந்து வருவதாகச் சொல்லியிருந்த ஒரு கட்டளை சார்வாளரும் கடைசியில் வரவில்லை. பேரம் பேசி எவ்வித பயனும் ஏற்படவில்லை என்பதால் கடைசியில் தலைக்கு ரூ. 500 என 4 பேருக்கு ரூ 2,000 கொடுத்து தான் வீட்டுச் சாமான்களை ஏற்று வரமுடிந்தது.
வீட்டுச் சாமான்களை நாமக்கல்லுக்கு கொண்டு வந்து இறக்குவதற்கு கூலியாட்கள் தேடியபோது அவர்கள் கேட்ட கூலி தலைக்கு ரூ 500 கேட்டதே பரவாயில்லை என்றாகிவிட்டது. ஆம்! நாமக்கலில் தலைக்கு ரூ. 1000 கேட்டார்கள். நான் தலைக்கு 500 தான் கொடுத்துக் கொண்டு வந்தேன். இங்கு இரண்டு மடங்கு கூலி கேட்கிறீர்களே என்று கூறி பேரம் பேசியதில் 'நாலு பேருக்கு ரூ 3000 கொடுங்கள்' என்ற நிலைக்கு வந்து நின்றது. அது அதிகமெனத் தோன்றியதால், லாரியை ஏற்பாடு செய்தவர்களிடம் கூலி ஆட்களை ஏற்பாடு செய்ய கேட்டேன். அவர் ஐந்து பேருக்கு ரூ. 3000 என்று ஒரு ஏற்பாடு செய்வதாக சொன்னார். தலைக்கு 500 தான் நியாயமானது. அதற்குமேல் கேட்டால் சரி இல்லை என்று நான் கூறினேன். சரி ஆறு பேர் வருவார்கள் ரூ 3000 கொடுத்துவிடுங்கள் என்று சொன்னார். ரூ 3000 என்பதிலேயே அவர் குறியாக இருந்தார். நானும் அதிக நேரம் பேரம் பேசுவதற்கு தெம்பு இல்லாததால், சரி அனுப்புங்கள் என்று கூறிவிட்டேன்.
லாரி உரிய இடத்திற்கு வந்து சேர இரவு எட்டு மணி ஆனது. கூலி ஆட்களும் அந்த லாரியிலேயே வந்துவிட்டார்கள். ஆனால் ஆறு பேர் வரவில்லை. ஐந்து பேர்தான் வந்திருந்தார்கள். அந்த ஐந்து பேரிலும் நால்வர் சுமார் பதினேழு பதினெட்டு வயதில் உள்ள பையன்கள். ஒருவர் வயதானவர். அவர்களைப் பார்க்க எனக்கு படு கடுப்பானது. 'தலையை கணக்கு பண்ணி வந்து இருக்கீங்க சரி! ஆனா பெரிய பெரிய கனமான மர பீரோ, கட்டில் எல்லாம் இருக்கிறதே எப்படி இருக்குவீர்கள்!' என்று கேட்டபோது, 'இறக்கி விடுவோம்!' என்று அந்தப் பையன்கள் சொன்னார்கள். 'வாலிப ஆட்களே முக்கி முனகி தூக்கி ஏற்றினார்கள். அவ்வளவு வெயிட்டான சாமான்கள். உங்களால் இறக்க முடியாது! போய் பெரிய ஆட்களை வரச் சொல்லுங்கள்!' என்று கூறிய பிறகும் இறக்கி விடுவதாகச் சொல்லி சற்று நேரம் வேலை செய்தார்கள். ஆனால் அவர்களால் படுதா கயிறைக் கூட அவிழ்க்க முடியவில்லை. பிறகு அவர்களே இறங்கிப் போய் விட்டார்கள். லாரியிலிருந்து சாமான்கள் இறக்கப்படாமலே லாரி விடிய விடிய அங்கேயே நின்றது.
மறுநாள் காலை ஏழு மணிக்கு கூலி ஆட்கள் வந்தார்கள். ஆனால் தற்போது ஆறு பேருக்கு பதிலாக ஏழு பேர் வந்து நின்றார்கள். 'ஆறு பேர் தானே வருவதாக சொன்னார்கள், நீங்கள் 7 பேர் வந்துள்ளீர்கள், பேசியபடி ரூ. 3000தான் தர முடியும்!' என்று சொன்னேன். வேலையை பார்த்துவிட்டு கொடுங்கள்! என்று கூறிவிட்டு அவர்கள் பாட்டிற்கு வேலையை ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் வேலையை முடித்துவிட்டு கூலி கேட்ட போது, நான் ரூ 3000 கொடுத்தேன். 'ஏழு பேர் இருக்கிறோம் ஒரு நூறு இருநூறு சேர்த்துக் கொடுங்கள்!' என்று கேட்டார்கள். என்னிடம் நூறு இருநூறு சில்லறை இல்லையே என்று சொன்னேன். கசகசவென்று பேரம் பேசி சர்ச்சையை ஏற்படுத்திக் கொள்ள விருப்பம் இல்லாததால், பிறகு போனால் போகிறது இன்று இன்னும் ஒரு 500 கொடுத்து முடித்து அனுப்பினேன்.
கூலி ஆட்களுக்கு நியாயமான கூலி கிடைக்க வேண்டுமென்றும், முதலாளிகள் தொழிலாளர்களை சுரண்டி வருகிறார் என்றும் முன்பெல்லாம் கூறி வந்தது நினைவுக்கு வந்தது. தற்போது இவர்கள் கேட்கும் கூலி நியாயமானது தானா? ஒரு மணி நேரத்து வேலைக்கு கூட ஆயிரமும் கேட்கிறார்கள், 500ம் கேட்கிறார்கள், வந்த வரையில் லாபம் என்று ஏற்றி இறக்கி பேரம் பேசுகிறார்கள். ஏன் இந்த மனநிலை? தற்போது கூலித் தொழிலாளர்கள் வறுமையில் வாடுகிறார்களா, அல்லது வசதியாக இருக்கிறார்களா? என்னதான் நிலவரம் தற்போது என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையைச் சொல்லி ஒரு நண்பரிடம் பேசியபோது, 'கூலிகள் பாவம் ஏழைகளாக வறுமையில் வாடுகிறார்கள் என்று இருந்த காலம் எல்லாம் மலையேறி விட்டது! தற்போது அவர்கள் சொல்வதுதான் கூலி! விவசாயத்திற்கு வேறு பல வேலைக்கு இன்று ஆட்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாகி விட்டது. மேலும் 100 நாள் வேலைத்திட்டம் வந்து கூலி ஆட்கள் கிடைப்பதை இன்னும் மோசமாகி விட்டது. கேட்பதை கொடுத்துவிட வேண்டியதுதான் வேறு வழியில்லை!' என்று அவர் சொன்னார். கொள்கைகளுக்கும் யதார்த்தத்திற்கும் இடையே உள்ள முரண்பாடு எனது சிந்தனைக்கு வித்திட்டது.
இருபது வருடங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்த போது ரூ 15000 சம்பளம் வாங்கிய நான் தற்போது பத்து மடங்கு சம்பளம் வாங்குகிறேன். அப்போது 50, 100 என இருந்த நாட்கூலி ரூ. 500 1000 என மாறுவது நியாயமானதுதானே என்று எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. இருப்பினும் வேலையில்லாத் திண்டாட்டம் நாட்டில் அதிகமாகிவிட்டது என்று எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் கூலியாட்கள் கிடைப்பது கடினமானதாக உள்ளது என்ற நிலவரம் குழப்பம் அளிப்பதாகவே இருந்தது. இந்த நிலவரத்தை சரியாகப் புரிந்துகொள்ள கம்யூனிசம் உதவுமா? காந்தியம் உதவுமா என்பது எனக்கு புரியாத புதிராகவே இருந்தது.
( பயணம் தொடரும்... )
---------------------------------------------------------------

Nice to read your experience
ReplyDeleteஇதுதான் சார் எதார்த்தம்.
ReplyDeleteசக்திமணி.
மிக்க நன்றி!
ReplyDelete